கோலி தினமும் இதை தவறாமல் செய்கிறார் – சஞ்சு சாம்சன் சொன்ன ஃபிட்னஸ் சீக்ரெட்!

விராட் கோலி தினமும் கடுமையான உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுவதாக சஞ்சு சாம்சன் பாராட்டியுள்ளார்.

Hero Image

டெல்லி : இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன், சமீபத்திய அணியின் தேர்வு முறைகள் மற்றும் தனது கிரிக்கெட் பயணம் குறித்துப் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளைப் (Diet & Workout) பின்பற்றித் தான் பட்ட சிரமங்கள் குறித்தும், அதனால் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

உடற்பயிற்சிக்கு ரோல் மாடல் விராட் கோலி

ஜியோ ஸ்டார் (Geo Star) நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சஞ்சு சாம்சன், இந்திய அணியில் உடற்பயிற்சி என்று வரும்போது விராட் கோலி தான் அனைவருக்கும் ரோல் மாடல் என்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், "கோலி ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது நானும் அவருக்கு அருகில் தான் ஒர்க் அவுட் செய்வேன். கோலியின் அந்த உற்சாகத்தையும், அர்ப்பணிப்பையும், ஆற்றலையும் வேறு யாராலும் ஈடுகட்ட முடியாது. கடினமான உடற்பயிற்சிகள் மூலமாகத் தனது உடலை மிகச் சிறப்பாகப் பராமரித்து வருகிறார். அவரால் ஈர்க்கப்பட்டு நானும் அவரிடமிருந்து உடற்பயிற்சி மற்றும் டயட் தொடர்பான ஆலோசனைகளைக் கேட்டேன்" என்றார்.

விராட் கோலி தனது உடற்பயிற்சியுடன் சேர்த்து மிகக் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டையும் (Strict Food Diet) தீவிரமாகப் பின்பற்றுபவர். இதுகுறித்து சாம்சன் மேலும் கூறுகையில், "கோலியிடம் அவரது டயட் மற்றும் ஒர்க் அவுட் திட்டங்களைக் கேட்டறிந்து பின்பற்றுமாறு அறிவுறுத்தல்களைப் பெற்றேன். அவர் எனக்காக ஒரு டயட் பிளான் மற்றும் ஒர்க் அவுட் பிளானை அமைத்துக் கொடுத்தார்.

அந்த முறையை நான் மிகக் கஷ்டப்பட்டு ஒரு வருடம் முழுவதும் பின்பற்றினேன். ஆனால், அதன் பிறகு என்னால் தொடர முடியவில்லை. ஒரு வருடத்திற்குப் பிறகு கோலியின் அந்த கடுமையான டயட் மற்றும் ஒர்க் அவுட் முறைகளைக் கைவிட்டுவிட்டேன்" என்று கூறினார்.

ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையில் உடற்பயிற்சியைப் பேணுவது என்பது மிக அவசியமான ஒன்றாகும். தொடர் நடக்கும் சில நாட்களில் மட்டும் உடற்பயிற்சி செய்துவிட்டு மற்ற நாட்களில் ஓய்வெடுப்பது பலனளிக்காது. கோலி தினமும் தனது டயட்டில் சிறிதும் சமரசம் செய்துகொள்ளாமல் அதனைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கிறார்.

கடுமையாகப் பயிற்சி செய்வதோடு மட்டுமல்லாமல், கடுமையான உணவு முறையையும் அவர் தொடர்ந்து பின்பற்றி வருவதே அவரது சிறப்பம்சமாகும் என்று சஞ்சு சாம்சன் பாராட்டிப் பேசியுள்ளார்.