காலை 7 மணி முதல் அதிரடி... செந்தில் பாலாஜி தொடர்புடைய 6 இடங்களில் சோதனை!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் சில இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Hero Image

கரூரில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ள நிகழ்வு மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக ஆட்சியை கவிழ்க்க குதிரை பேரம் நடத்த முயன்றதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று காலை சரியாக 7 மணி முதல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து கரூரில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக, மண்மங்கலம் அருகிலுள்ள செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான ராமேஸ்வரப்பட்டியில் அமைந்துள்ள அவரது பூர்வீக வீடு மற்றும் அவரது பெற்றோரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்களுடன் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சுப்பிரமணி வீடு, திமுக தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கரன் வீடு, கோதைநகர் பகுதியில் அமைந்துள்ள கார்த்தி மற்றும் ரமேஷ் ஆகியோரின் வீடுகள் மற்றும் கரூர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் உள்ளிட்ட மொத்தம் 6 இடங்களில் இந்தச் சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தொடர்ச்சியாக நடைபெறும் இந்தச் சோதனையின் முடிவிலேயே கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் மற்றும் முறைகேடுகள் குறித்த முழுமையான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.