திமுக யார் மீதும் வீண் பழி சுமத்தாது, குற்றசாட்டுகளை நிரூபித்து காட்டுவோம் என ஆர்எஸ் பாரதி பேட்டி.
எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டியதில்லை என்றும் ஈபிஎஸ் மீதான ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தொடந்து விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எடப்பாடி பழனிசாமி ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடுகளை செய்திருப்பதாக 2018-ம் ஆண்டில் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அப்போது, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, இந்த வழக்கு தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றுதான் உச்சநீதிமன்றத்தில் கேட்டோம். உரிய விசாரணை நடத்த வேண்டும், யார் விசாரிக்க வேண்டும் என்பதில் கவலையில்லை. டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர் நீதிமன்றமே விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
திமுக யார் மீதும் வீண் பழி சுமத்தாது, குற்றசாட்டுகளை நிரூபித்து காட்டுவோம். எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் திமுகவின் கோரிக்கையை உச்சநீதிமன்றத்தில் ஏற்கப்பட்டது. ஊழல் புகார் குறித்து நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு. ஈபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விரைவில் விசாரிக்கும் என கூறினார்.
திமுக தொடுக்கும் அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெறும் என்று நம்பிக்கை உள்ளது. ஏற்கனவே, 1995-ல் இருந்து திமுக தொடுத்த பல வழக்குகளில் குற்றவாளிகள் தண்டனை பெற்றுள்ளனர். நியாயமான விசாரணை வேண்டும் என்றுதான் கோரினோமே தவிர சிபிஐ விசாரணை தேவை என கோரவில்லை என்று கூறிய ஆர்எஸ் பாரதி, கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் கண்டேய்னர் லாரியில் ரூ.570 கோடி பிடிபட்டது குறித்து சிபிஐ இதுவரை விசாரிக்கவில்லை எனவும் குற்றசாட்டினார்.