ஈரான் :இஸ்ரேல் – அமெரிக்கா இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் புதிய மிரட்டல் விடுத்துள்ளது. “ஈரான் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் பழி தீர்ப்போம்” என்று ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான பதிலடி தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தும் என்று எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவுக்கு தொடர்புடைய அனைத்து எண்ணெய் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளைத் தாக்கி அழித்து சாம்பலாக்குவோம் என்று ஈரான் பரபரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது ஹார்முஸ் ஜலசந்தி, எண்ணெய் கிடங்குகள், சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளிட்டவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.ஈரானின் 90% எண்ணெய் ஏற்றுமதியை கையாளும் கார்க் தீவு மீது அமெரிக்கா தாக்கியதால் போர் தீவிரமடைந்துள்ளது.
இந்த தாக்குதலில் ஈரான் பெரும் சேதத்தை சந்தித்துள்ளதாகவும், இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் எரிசக்தி கட்டமைப்புகளை அழிப்போம் என்றும் ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.இந்த மிரட்டல் உலக அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாக உலகின் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய எச்சரிக்கை எண்ணெய் விலை உயர்வை மேலும் தூண்டும் என்று சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர்.
மேலும், இந்த போர் நிலைமை இந்தியாவையும் பெரிதும் பாதித்துள்ளது. எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு, எரிபொருள் விலை உயர்வு போன்றவை தொடரும் அபாயம் உள்ளது. ஈரான் தரப்பின் இந்த மிரட்டல் சமாதான பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்குமா அல்லது போரை மேலும் நீட்டிக்குமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.
