மக்களே அலர்ட்...இன்று இந்த மாவட்டங்களில் இடி,மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

The Chennai Meteorological Department has forecast thunder heavy rain in Cuddalore, Ramanathapuram, Pudukkottai and Delta districts.

தமிழகத்தில் இன்று கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக தமிழகத்தில் இன்று கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம்,இன்று கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,நாளை,அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.