தூத்துக்குடி : மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், தமிழக அரசின் செயல்பாடுகள், சட்டம் ஒழுங்கு நிலை மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கடுமையாக விமர்சித்தார்.
அவர் கூறியதாவது “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிலும் பல இடங்களில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களே குற்றச்சாட்டுகளில் சிக்குவதாக தகவல்கள் வெளியாகின்றன. ஆனால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்திலும், பாதிக்கப்பட்டவரும் ஆளுங்கட்சி ஆதரவாளர் என்றும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களும் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அமைச்சர்கள் யாரும் கருத்து தெரிவிக்கவில்லை.
திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேசிய விதமும் தேர்தல் பிரச்சாரத்தை நினைவுபடுத்தும் வகையிலேயே இருந்தது. ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஒருவரின் பேச்சாக இல்லாமல், தேர்தல் மேடையில் பேசுவது போலவே இருந்தது. தற்போது மாநிலத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் இருப்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பாகவும் அரசு உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. வந்தே மாதரம் விவகாரத்திலும் குழப்பமான அணுகுமுறையே காணப்படுகிறது. மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே அரசின் முதன்மை கடமையாக இருக்க வேண்டும்.
ஆட்சிக்கு வந்தபோது ஆறு மாத கால அவகாசம் வேண்டும் என்று கூறியிருந்தார்கள். ஆனால் அந்த காரணத்தை கூறி மாநிலத்தில் நடைபெறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து மக்கள் கேள்வி கேட்கக்கூடாது என்று சொல்ல முடியாது.
எதிர்க்கட்சியாக ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டுவது எங்களுடைய கடமை. மக்களின் பிரச்சினைகளை தொடர்ந்து முன்வைப்போம். தேர்தல் அறிக்கையில் ஐந்து ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்றும், அதற்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களுக்கு பகுதி கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது ரூ.50 ஆயிரம் வரை கடன் வாங்கியவர்களுக்கு மட்டுமே முழு தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.
அப்படியானால் தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்ட ஐந்து ஏக்கர் என்ற அளவுகோல் எங்கே போனது? தேர்தலுக்கு முன் கூறிய வாக்குறுதிகளுக்கும் தற்போது எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.
அரசின் விளம்பரங்கள் மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் மூலம் பல்வேறு சாதனைகள் கூறப்பட்டாலும், உண்மை நிலை வேறுபட்டதாக உள்ளது. காலப்போக்கில் மக்கள் இதை புரிந்துகொள்வார்கள். ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து மக்கள் தங்களின் தீர்ப்பை வழங்குவார்கள்” என்று கீதாஜீவன் தெரிவித்தார்.
