டெல்லி : நடந்து முடிந்த ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற விராட் கோலி, தற்போது காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து ஓய்வெடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியின் போது விராட் கோலிக்கு தொடைப் பகுதியில் தசைப்பிடிப்பு மற்றும் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. போட்டியை முழுமையாக விளையாடியிருந்தாலும், அதன் பின்னர் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், வரும் ஜூன் 13-ஆம் தேதி தொடங்க உள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. காயம் மேலும் மோசமடையாமல் இருக்க அவருக்கு ஓய்வு அளிக்க இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி, ஆர்சிபி அணியின் தொடர்ச்சியான இரண்டாவது சாம்பியன் பட்ட வெற்றியில் முக்கிய பங்காற்றினார். எனவே, அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவசரப்படாமல் முழுமையாக குணமடைந்த பிறகே மீண்டும் களமிறக்க பிசிசிஐ முடிவு செய்யலாம் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட நிலையில், விராட் கோலியின் உடல்நிலை குறித்து மருத்துவக் குழுவின் இறுதி அறிக்கைக்கு பிறகே அதிகாரப்பூர்வ முடிவு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுவரை பிசிசிஐ அல்லது விராட் கோலி தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
