டெல்லி : இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் நடுத்தர வர்க்க மக்களின் மிக முக்கிய அடையாளமாக விளங்கும் ஹீரோ ஸ்ப்ளெண்டர் மற்றும் ஹெச்.எஃப் டீலக்ஸ் பைக்குகளில், ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கொண்டு வந்துள்ளது.
பெட்ரோல் விலை உயர்வால் தினசரி அவதிப்படும் வாகன ஓட்டிகளுக்குப் பெரும் ஆறுதலாக, பெட்ரோல் மட்டுமன்றி எத்தனால் கலவை எரிபொருளிலும் இயங்கக்கூடிய புதிய ஃப்ளெக்ஸ் ஃப்யூல் (Flex Fuel) மாடல்களை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
விலை விபரம்
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹீரோ ஹெச்.எஃப் டீலக்ஸ் ஃப்ளெக்ஸ் ஃப்யூல் மாடலின் ஆரம்ப விலை 72,792 ரூபாயாகவும், ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் ஃப்ளெக்ஸ் ஃப்யூல் மாடலின் விலை 82,710 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.
முதற்கட்டமாக வரும் ஜூலை 2026 முதல் டெல்லி மற்றும் மகாராஷ்டிராவின் சில குறிப்பிட்ட பகுதிகளில் இதன் விற்பனை தொடங்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்களில் தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதிலும் உள்ள பிற மாநிலங்களுக்கும் இந்த பைக்குகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஃப்ளெக்ஸ் ஃப்யூல் சிறப்பம்சங்கள்
பெட்ரோலுடன் எத்தனால் கலந்த எரிபொருளைப் பயன்படுத்தி இயங்கக்கூடிய வாகனங்களே ஃப்ளெக்ஸ் ஃப்யூல் வாகனங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஹீரோவின் இந்த புதிய பைக்குகள் 20 சதவீத எத்தனால் கலந்த E20 எரிபொருள் முதல், 85 சதவீத எத்தனால் கலந்த E85 எரிபொருள் வரை எத்தகைய கலவையிலும் தங்கு தடையின்றி இயங்கும் திறன் கொண்டவை.
பெட்ரோலை விட எத்தனால் விலை மிகவும் குறைவு என்பதால், இந்த தொழில்நுட்பம் பொதுமக்களின் தினசரி பயணச் செலவை கணிசமாகக் குறைக்கும். மேலும், இது கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவை நாட்டுக்குக் குறைப்பதுடன், சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் பெருமளவு கட்டுப்படுத்தும்.
என்னென்ன மாற்றங்கள்?
இந்த பைக்குகளில் வழக்கமான நம்பகத்தன்மை மாறாமல் இருப்பதற்காக, 97.2 சிசி திறன் கொண்ட ஒற்றை சிலிண்டர், ஏர்-கூல்டு எஞ்சினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 8.6 குதிரைத்திறன் மற்றும் 8.3 நியூட்டன் மீட்டர் டார்க்கை வெளிப்படுத்தும்.
எத்தனால் எரிபொருளின் தன்மைக்கு ஏற்ப இயங்குவதற்காக, இதன் மின்னணு கட்டுப்பாட்டு அமைப்பு, மேம்படுத்தப்பட்ட எரிபொருள் பம்ப் மற்றும் கூடுதல் வடிகட்டி அமைப்புகள் பிரத்தியேகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. தோற்றத்தைப் பொறுத்தவரை பழைய வடிவமைப்பு அப்படியே இருந்தாலும், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் மஞ்சள் மற்றும் கருப்பு நிறங்கள் கலந்த புதிய கிராபிக்ஸ் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
மைலேஜ் விவரம்
ஹீரோ நிறுவனம் இந்த பைக்குகளின் அதிகாரப்பூர்வ மைலேஜ் விபரங்களை இன்னும் வெளியிடவில்லை. சாதாரண ஸ்ப்ளெண்டர் பைக்குகள் ஒரு லிட்டருக்கு 65 முதல் 70 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் நிலையில், எத்தனால் எரிபொருளைப் பயன்படுத்தும்போது மைலேஜ் சற்று குறைய வாய்ப்புள்ளதாக வாகன நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், எத்தனால் விலை குறைவாக இருப்பதால் ஒட்டுமொத்த பயணச் செலவு கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கும். இவற்றுடன் டிஜிட்டல் மற்றும் அனலாக் கலந்த புதிய மீட்டர், சைடு ஸ்டாண்ட் எஞ்சின் கட்-ஆஃப் வசதி மற்றும் டியூப்லெஸ் டயர்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஸ்ப்ளெண்டர் மாடலில் சிக்னல்களில் எரிபொருளைச் சேமிக்கும் ஐ3எஸ் தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
