தூத்துக்குடி : மாவட்டத்தில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் பங்கில் நடந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் ஒருநாள் பெட்ரோல் விற்பனையை நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபட நேரிடலாம் என தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கே.பி. முரளி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது “தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில், சிலர் வாகனத்தில் வந்து பெட்ரோல் நிரப்ப வந்துள்ளனர். அப்போது அவர்களில் ஒருவர் பெட்ரோல் நிரப்பும் இடத்திலேயே சிறுநீர் கழித்துள்ளார். இதை பார்த்த ஊழியர்கள், ‘இங்கு இவ்வாறு செய்யக்கூடாது, கழிப்பறையை பயன்படுத்துங்கள்’ என்று அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால் அந்த நபர்கள் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டதுடன், அவர்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து சென்ற அவர்கள், ஒரு மணி நேரம் கழித்து மேலும் சிலருடன் ஆயுதங்களோடு திரும்பி வந்துள்ளனர்.
அரிவாள், இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த கும்பல், ஊழியர்களை தாக்க முயன்றுள்ளது. உயிர் அச்சத்தில் ஊழியர்கள் பாதுகாப்பு அறைக்குள் சென்று தஞ்சமடைந்தனர். அவர்களை தாக்க முடியாததால், பெட்ரோல் பங்கில் இருந்த பொருட்கள் மற்றும் உபகரணங்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.
பெட்ரோல் பங்கில் சேதப்படுத்தப்பட்ட சொத்துகள் அனைத்தும் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு சொந்தமானவை. இது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய குற்றமாகும். அந்த நேரத்தில் அங்கு பெண்கள், குழந்தைகள் அல்லது பொதுமக்கள் இருந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் அபாயம் இருந்தது.
இதுபோன்ற சம்பவங்கள் பெட்ரோல் பங்குகளில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து மிகப்பெரிய கேள்வியை எழுப்புகிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் போதைப்பொருள் அல்லது மதுபோதையில் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது. சாதாரண மனநிலையில் இருப்பவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் தீவிர விசாரணை நடத்தி, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். பெட்ரோல் பங்குகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் முக்கிய ஆதாரமாக இருக்கும்.
ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், தாக்குதல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அரசு முன்வர வேண்டும். இல்லையெனில் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 7,000 பெட்ரோல் பங்குகளை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தமாக மூடி, எரிபொருள் விற்பனையை நிறுத்தும் முடிவை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும். அரசு எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தே எங்களின் அடுத்தகட்ட முடிவுகள் இருக்கும்” என கே.பி. முரளி தெரிவித்துள்ளார்.
