சென்னை :தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதிமுக – பா.ஜ.க கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மிகவும் சுமுகமாக நடைபெற்று வருவதாகவும், தொகுதிப் பங்கீடு குறித்த முடிவுகள் கிட்டத்தட்ட இறுதி நிலையை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நயினார் நாகேந்திரன் மேலும் கூறியதாவது, “விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும். மாநிலத் தலைவர் என்ற முறையிலும், கட்சியின் முக்கிய பொறுப்பாளர் என்ற முறையிலும் நான் இதுவரை நடிகர் விஜய்யிடமோ அல்லது அவரது தரப்பினரிடமோ எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. யாரும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை” என்று தெளிவுபடுத்தினார்.
தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா “பா.ஜ.கவுடன் 90 தொகுதிகளுக்கு பேரம் பேசப்பட்டது” என்று கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, நயினார் நாகேந்திரன் கடுமையாக மறுத்தார். “ஆதவ் அர்ஜுனா யாரென்றே எனக்குத் தெரியாது. 90 இடங்கள் துணை முதல்வர் போன்ற எந்த பேச்சுவார்த்தையும் விஜய் உடன் நடத்தவில்லை. அத்தகைய எந்த பேச்சும் நடைபெறவில்லை” என்று அவர் உறுதியாக தெரிவித்தார்.
இந்த அறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைவர் விஜய் தனித்துப் போட்டியிடுவேன் என்று மீண்டும் உறுதியாக தெரிவித்த நிலையில், பா.ஜ.க தரப்பு அதற்கு எந்த வகையிலும் ஆர்வம் காட்டவில்லை என்பதை நயினார் நாகேந்திரனின் பேச்சு தெளிவுபடுத்தியுள்ளது.ஒட்டுமொத்தமாக, அதிமுக – பா.ஜ.க கூட்டணி தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விஜய் மற்றும் தவெகவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று பா.ஜ.க தலைமை தெளிவாக அறிவித்துள்ளது. இது 2026 தேர்தல் களத்தில் தவெக தனித்து போட்டியிடும் நிலைமையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
