முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது - திமுக தலைவர்கள் கடும் கண்டனம்!

இந்த நடவடிக்கை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எடுக்கப்பட்ட 'போலீஸ் ராஜ்ஜியம்' என்றும், எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் முயற்சி என்றும் திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Hero Image

சென்னை : தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி, திமுக முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணனை தவெக அரசு அதிரடியாகக் கைது செய்துள்ளது. அவர் தனது தொகுதியில் மக்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, சினிமா பாணியில் காவல்துறையினர் அவரை கைது செய்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு திமுக தலைவர்கள் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தில், "சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்தும் தவெக அரசு, கவனத்தை திசைதிருப்பவே (Take Diversion) இந்தக் கைது நடவடிக்கையை எடுத்துள்ளது. திருவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ மீது எழுந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகாரில் நடவடிக்கை எடுக்க வக்கற்ற இந்த 'தூயசக்தி ஆட்சி', எதிர்க்கட்சித் தலைவர்களைக் கைது செய்வதில் மட்டும் ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறது?

தமிழகத்தில் பெருகிவரும் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் குற்றங்களைத் தடுக்கத் தவறிய இந்த அரசு, குதிரைபேரத்தின் மூலம் நாற்காலியைத் தக்கவைத்துக்கொண்டு, விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை அடக்குமுறையால் முடக்க நினைக்கிறது. ஆணவம் அழிவிற்கு வழி!" என்று எச்சரித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் "தமிழகமெங்கும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. அதை மீட்டெடுக்கத் துளியும் வேகம் காட்டாத இந்த அரசு, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வைக் கைது செய்வதில் மட்டும் அதிவேகம் காட்டுகிறது. அவதூறு பேசுவதையும், பொய் பழிகளைச் சுமத்துவதையும் மட்டுமே அரசியலாகக் கொண்டுள்ள ஆளுங்கட்சியின் இந்த அராஜகப் போக்கை மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். பொய் வழக்குகள் மற்றும் கைது நடவடிக்கைகளால் கழகத்தை ஒருபோதும் முடக்க முடியாது; இந்த 'ரீல்ஸ்' அரசின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது" என்று சாடியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் கைது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று கூறிய கனிமொழி, "ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதிப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, அராஜகமான முறையில் காவல்துறை அவரை கைது செய்திருப்பது தவெக அரசின் அடக்குமுறையை வெளிப்படுத்துகிறது. இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கோ அல்லது அடக்குமுறைகளுக்கோ திமுக ஒருபோதும் அடிபணியாது" என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.