'அதுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை' – ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் சங்கம் விளக்கம்.!

கண்டன அறிக்கைக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

Edappadi Palanisamy - Ambulance

சென்னை :வேலூரில் பொதுவெளியில் நடைபெற்ற அதிமுக பிரசாரத்தில், ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு மிரட்டல் விடுத்த எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் #மன்னிப்பு_கேள்_பழனிசாமி என்ற ஹேஸ்டாக் ட்ரெண்டாகி வருகிறது. அவசரமாக ஆம்புலன்ஸ் வந்தபோது “அடுத்த முறை கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வந்தால், ஆம்புலன்ஸ் ஓட்டுபவர்கள் பேஷண்ட்டாக அதே ஆம்புலன்ஸில் செல்ல வேண்டியது வரும் என்று மிரட்டல் விடுத்துள்ளார் பழனிசாமி.

இந்த நிலையில், இன்று காலை வெளியான கண்டன அறிக்கைக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில், ”இன்றைய தினம் (19.08.2025) தமிழக ஊடகங்களில் எங்களது சங்கத்தின் சார்பாக நேற்று வேலூரில் அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, 108 ஓட்டுநரை வழி மறித்து அவரை மிரட்டும் தோணியில் பேசியதாகவும் அதற்கு அவர் மன்னிப்பு கேட்கவில்லையெனில் நாடு தழுவிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என்ற பெயரில் கண்டன அறிக்கையானது சங்கத் தலைவரின் பெயரையும், எங்களது சங்க லெட்டர் பேடை தவறாகவும், அவதூறாகவும் பயன்படுத்தி கண்டன அறிக்கையினை வெளியிட்டு உள்ளனர்.

மேற்கண்டபடி எந்தவொரு கண்டன அறிக்கையையும் எங்களது சங்கத்தின் சார்பாகவோ, தலைவரோ யாதொரு ஊடகத்திற்கும் அறிக்கையோ, பேட்டியோ கொடுக்கவில்லை. அப்படி இருக்கையில் எங்களது சங்கத்தின் பெயரை பயன்படுத்தி பொய்யான தகவல்களை யாரோ வழங்கியுள்ளனர். இந்த கண்டன அறிக்கைக்கும் எங்களது சங்கத்திற்கும் எந்தவித சம்பந்தமுமில்லை.

எங்களது சங்கமானது தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களின் நலனுக்காக மட்டுமே செயல்படும் சங்கமாகும். இது ஒரு அரசியல் சாராத இயக்கம் ஆகும். ஆகவே ஊடக நண்பர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் இந்த செய்தியை ஒளிபரப்பு செய்ய வேண்டுமெனவும், அதனை உடனே நீக்கம் செய்ய வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன். மேலும் இந்த தவறான செயல்களை செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறையின் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node