ஈரோடு :தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் நடிகர் விஜய் இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். “சலுகைகளுக்கு எதிரானவன் நான் இல்லை. மக்களுக்கான சலுகைகளை இலவசம் என்று சொல்லி அசிங்கப்படுத்துபவன் இல்லை. ஓசி ஓசி எனக் கூறி மக்களை கேவலப்படுத்துகிறீர்களா? அதைத் தட்டிக்கேட்க நான் வருவேன்” என்று ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.
“பெரியார் பெயரைச் சொல்லிக்கொண்டு தயவுசெய்து கொள்ளையடிக்காதீர்கள். பெரியார் பெயரைச் சொல்லி பணம் சம்பாதிப்பவர்கள்தான் எங்கள் அரசியல் எதிரி” என்று விஜய் தெரிவித்தார். பொது வாழ்க்கையில் இருந்தபோதும் தனக்கென ஒரு பைசா கூட சம்பாதிக்காதவர் பெரியார் என்று பாராட்டிய அவர், அவரது பெயரை தவறாகப் பயன்படுத்துவதை கண்டித்தார்.
“எம்.ஜி.ஆர், ஜெயலலிதா திமுகவை கடுமையாக விமர்சித்தது ஏன் என்று சிறுவயதில் யோசிப்பேன். இப்போது தான் புரிகிறது. திமுக ஒரு தீய சக்தி. தவெக ஒரு தூய சக்தி. தூய சக்தி தவெகவுக்கும் தீய சக்தி திமுகவுக்கும் தான் போட்டி” என்று விஜய் கூறினார். “களத்தில் இருப்பவர்களை மட்டுமே எதிர்க்கிறோம். களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க மாட்டோம்” என்று தெளிவுபடுத்தினார்.
அதனை தொடர்ந்து, “உங்களைப் போல தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக, அசிங்கமாகப் பேசுவது தான் அரசியல் என்றால் அந்த அரசியல் நமக்கு வராது. வராது என்றால் அப்படி இல்லை… உங்களை விட எனக்கு நல்லாவே வரும். வேணாம்னு விட்டு வச்சிருக்கேன். அப்புறம் ரெண்டு பேருக்கும் என்ன வித்தியாசம்?” என்று விஜய் சவால் விடுத்தார்.இந்தப் பிரச்சாரக் கூட்டம் ஈரோடு மாவட்டத்தில் தவெகவின் செல்வாக்கை வெளிப்படுத்தியது. விஜய்யின் உரை தொண்டர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தவெகவின் பிரச்சாரம் தீவிரமடைந்து வருவதை இந்தக் கூட்டம் உறுதிப்படுத்தியது.
