சென்னை : தமிழக அரசு தலைமை செயலகத்தில் வெளியே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார் தவெக-வில் இணையும் அதிமுக எம்.எல்.ஏ-க்களிடம் பேரம் பேசுவதாகவும், மிரட்டல் விடுப்பதாகவும் திமுக மற்றும் அதிமுக தலைவர்கள் மீது அவர் அடுக்கடுக்கான புகார்களைக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், "உதயநிதி ஸ்டாலினின் உத்தரவின் பேரில்தான் தவெக எம்.எல்.ஏ-க்களிடம் பேரம் பேசும் பணிகள் நடக்கிறது. ஸ்டாலினும், உதயநிதியும் தலா ரூ.50 கோடி வரை லஞ்சம் கொடுத்து எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க முயற்சிப்பது மிகவும் கேவலமான அரசியல். பல எம்.எல்.ஏ-க்கள் இது குறித்து எங்களிடம் புகார் அளித்துள்ளனர்; அவர்களில் சிலருக்கு நேரடி மிரட்டல்களும் விடுக்கப்படுகின்றன.
இந்த கீழ்மட்ட மற்றும் கேவலமான செயலில் ஈடுபடும் நபர்கள் மீது தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" என்று நிர்மல்குமார் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த 'குதிரை பேர' விவகாரத்தில் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்களுக்கும், கரூர் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் "திமுக மட்டும் அல்ல, அதிமுக-வின் எடப்பாடி பழனிசாமியும் ஒரு வழியில் திமுக-வுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, தவெக ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்கிறார். திமுக, அதிமுக என இரண்டு தரப்புமே குறுக்கு வழியில் ஆட்சி அமைக்கத் துடிக்கின்றன" என்று அவர் சாடியுள்ளார். வைகோ மற்றும் மதிமுக-வின் ஆதரவு குறித்துப் பேசிய அவர், அவர்களாகவே எங்களுடன் இணைந்து பயணிக்க விரும்புவதாகவும், அதை நாங்கள் வரவேற்பதில் எந்தத் தவறும் இல்லை என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய நிர்மல்குமார், "தங்கள் தொகுதியில் மக்களுக்காகக் கடுமையாக உழைத்து வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்கள், இன்று கட்சியில் நிலவும் மோசமான தலைமை மற்றும் சூழலால் விரக்தியடைந்து ராஜினாமா செய்கின்றனர். எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வது சாதாரண விஷயம் அல்ல. அந்த உணர்ச்சிவசப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் எங்களிடம் வரும்போது, அவர்களை ஆசுவாசப்படுத்தி, அவர்களுக்கு ஆறுதல் மட்டுமே கூறுகிறோம்.
திமுக-வில் கூட கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின் குடும்பம் மட்டுமே கோலோச்சுகிறது, இதனால் அங்குள்ள நிர்வாகிகளே அதிருப்தியில் எங்களைச் சந்திக்கின்றனர். நாங்கள் யாரையும் வலுக்கட்டாயமாக இழுக்கவில்லை, அவர்களாகவே இத்தகைய தரங்கெட்ட அரசியலை விட்டு வெளியேறி எங்களிடம் வருகின்றனர்" என்று தனது பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
