சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார்.தமாகா சார்பில் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை ஜி.கே. வாசன் வெளியிட்டார். அதில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் விடியல் சேகர், ஈரோடு மேற்கு தொகுதியில் யுவராஜா, ராணிப்பேட்டை தொகுதியில் கார்த்திகேயன், கும்பகோணம் தொகுதியில் அசோக் குமார் மற்றும் கிள்ளியூர் தொகுதியில் சைமன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வேட்பாளர்களைத் தேர்வு செய்வது சுலபமான காரியம் அல்ல என்று ஜி.கே. வாசன் தெரிவித்தார். “5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார் என்பதை எங்களால் சுலபமாக முடிவு செய்ய முடியவில்லை” என்று அவர் கூறினார்.ஜி.கே. வாசன் பேசுகையில், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமாகா நேரடியாகப் போட்டியிட்டதாகவும், அதன் அடிப்படையில் தனக்கு ஒரு நாடாளுமன்றத் தொகுதியும், பின்னர் ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் கிடைத்ததாகவும் நினைவு கூர்ந்தார்.
அதன் பிறகு 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக கூட்டணி தொடர்ந்தது.அந்தத் தேர்தலில் தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் கிடைக்காததால், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டதாக வாசன் தெரிவித்தார். “கூட்டணிக்கு உள்ள நியாயம் அதுதான்” என்றும் அவர் கூறினார். இந்த முறையும் சைக்கிள் சின்னம் கிடைக்காத சூழ்நிலையை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது தமாகா அதிமுக கூட்டணியில் இருந்து விலகி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்ததை வாசன் நினைவு கூர்ந்தார். “பிரதமர் மோடி தலைமையில் நல்லாட்சி உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டணி மாறினோம்” என்று அவர் விளக்கினார். அதேபோல், பாமகவும் அதிமுகவிடம் இருந்து பாஜக கூட்டணிக்கு மாறியதை அவர் சுட்டிக்காட்டினார்.
