டெல்லி : இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, இங்கிலாந்துக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உடல்தகுதி பிரச்சினை காரணமாக அவர் முழுமையாக குணமடையாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தற்போதைய ஒருநாள் தொடரிலும் ஹர்திக் பாண்ட்யா விளையாடவில்லை. தொடைப்பகுதியில் (Quadriceps) ஏற்பட்ட தசைப்பிடிப்பு காயம் காரணமாக அவர் அணியில் இருந்து விலகியிருந்தார். இதையடுத்து பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு பயிற்சி மையத்தில் தீவிர உடல்தகுதி பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார
இங்கிலாந்து தொடருக்கு முன்பாக மீண்டும் முழு உடல்தகுதியை எட்டும் நோக்கில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஹர்திக், 10 ஓவர்கள் முழுமையாக வீசும் அளவிற்கு தயாராக முயற்சி செய்து வந்தார். ஆனால் பயணத்திற்கு முன்பாக மீண்டும் அதே பகுதியில் அசௌகரியம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் முழுமையான போட்டி உடல்தகுதியை எட்ட முடியாத நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் அவர் இடம்பெற மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிதிஷ் குமார் ரெட்டிக்கு பொன்னான வாய்ப்பு
ஹர்திக் பாண்ட்யா இல்லாத நிலையில், இளம் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டிக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் தொடருக்காக அணியில் சேர்க்கப்பட்ட அவர், தற்போது இங்கிலாந்து தொடரிலும் தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக சிறப்பாக விளையாடிய நிதிஷ், இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் எப்போது?
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான சுற்றுப்பயணம் ஜூலை 1ஆம் தேதி தொடங்குகிறது. முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறும்.
2027 உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான தயாரிப்பில் இந்த ஒருநாள் தொடர் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எனவே ஹர்திக் பாண்ட்யாவின் இல்லாமை இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், பாண்ட்யாவின் உடல்நிலை குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
