மத்திய பட்ஜெட்டில் ‘தமிழ்நாடு’ என்ற வார்த்தைகூட இல்லை… செல்வப்பெருந்தகை கடும் கண்டனம்!

nirmala sitharaman budget selva perunthagai

தூத்துக்குடி: பட்ஜெட் உரையில் தமிழ்நாடு என்ற பெயரையே உச்சரிக்காத நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வன்மையாக கண்டிக்கிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியுள்ளார்.

இன்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் 2024-ஐதாக்கல் செய்தார். அதில் ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இதனையடுத்து, பட்ஜெட் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து  பல அரசியல் தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பா.சிதம்பரம், அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

அந்த வகையில்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.  தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு காங்கிரஸ் கமிட்டிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு சென்னையில் இருந்து வருகை தந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்த போது பேசியதாவது ” பட்ஜெட் உரையில் தமிழ்நாடு என்ற பெயரையே உச்சரிக்காத நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வன்மையாக கண்டிக்கிறேன். மோடி ஆட்சியில் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது” என கூறினார். 

அதனை தொடர்ந்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் ” கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத நிலையில் மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பிரதமர் மோடி தலைமையில் அமைந்து முதல் பட்ஜெட்டை மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்திருக்கிறார்.

பட்ஜெட் உரையில் வருமான மதிப்பீடு ரூபாய் 32 லட்சம் கோடியாகவும், செலவினங்கள் ரூபாய் 48 லட்சம் கோடியாகவும் 2025 ஆம் நிதியாண்டில் இருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. இது ஒரு ஆரோக்கியமான நிதி மேலாண்மையை உறுதி செய்வதாக இல்லை. காரணம், ஏற்கனவே பா.ஜ.க. ஆட்சியில் ரூபாய் 155 லட்சம் கோடி கடன் இருப்பதால் அதற்கு வட்டியாக பெருந்தொகையை செலவிட வேண்டிய நிலையில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இருக்கிறது.

கடந்த காலங்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் வேலையில்லா திண்டாட்டம், வருமானத்தில் ஏற்றத்தாழ்வுகள், விவசாயிகளின் பிரச்சினைகள் என பல்வேறு பிரச்சினைகளுக்கு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிதிநிலை அறிக்கையை பார்க்கிற போது தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் நிதிநிலை அறிக்கையா ? ஆந்திரா, பீகார் மாநில நிதிநிலை அறிக்கையா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இன்றைக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசை காப்பாற்றுவது நிதிஷ்குமாரும், சந்திரபாபு நாயுடுவும் தான். அதனால் அவர்கள் விடுத்த கோரிக்கைகளின் அடிப்படையில் பீகார் மாநிலத்திற்கு ரூபாய் 26 ஆயிரம் கோடி நிதியும், ஆந்திர மாநிலத்திற்கு ரூபாய் 15 ஆயிரம் கோடி சிறப்பு நிதியாக நிர்மலா சீதாராமன் வாரி வழங்கியிருக்கிறார். இந்த அறிவிப்பை படிக்கும் போது மக்களவை எதிர்கட்சி உறுப்பினர்களிடையே கடும் எதிர்ப்புக் குரல் எழுந்தது.

தமிழக முதலமைச்சர் விடுத்த கோரிக்கையின்படி வெள்ள நிவாரண நிதியோ, மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியோ, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரயில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடோ முற்றிலும் வழங்கப்படாமல் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. நிர்மலா சீதாராமன் வாசித்த நிதிநிலை அறிக்கையில் வழக்கமாக வாசிக்கப்படும் தமிழ்நாடு என்ற வார்த்தையும் இல்லை, பாரதியார் கவிதைகளோ, திருக்குறளோ இல்லை. கடந்த மக்களவை தேர்தலின் போது தமிழகத்திற்கு 10 முறை சுற்றுப்பயணம் மேற்கொண்ட நரேந்திர மோடி ஆட்சி சமர்ப்பித்த தேர்தல் அறிக்கையில் தமிழ்நாடு என்ற ஒரு வார்த்தை கூட இல்லாதது அவரது கபட நாடகத்தை அம்பலமாக்கியுள்ளது.

நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு முன்பு காங்கிரசின் தேர்தல் அறிக்கையை படித்திருப்பதற்கான வாய்ப்புகள் அவரது அறிக்கையில் தென்படுகின்றன. அதன்படி காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 1 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சிக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்று உறுதி கூறப்பட்டிருந்தது.

அதை நிறைவேற்றுகிற வகையில் நிர்மலா சீதாராமன் 20 லட்சம் இளைஞர்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ஊக்கத் தொகையுடன் பயிற்சி வழங்கப்படும் என்று கூறி அதற்கான நிதியை ஒதுக்கியிருக்கிறார். சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கோ எந்தவிதமான சலுகைகளும் இல்லை. வேலை வாய்ப்பை பெருக்குகிற வகையில் பெரிய திட்டங்கள் எதுவும் இல்லை.

கடந்த 10 ஆண்டு மோடி ஆட்சியில் வருமானத்தில் ஏற்றத்தாழ்வு அதிகரித்து ஒரு குறிப்பிட்ட சிலர் சொத்து குவிக்கிற அவலநிலை நீடித்து வந்தது. அதன்படி 10 சதவிகிதத்தினர் 65 சதவிகித சொத்துகளையும், உயர்நிலையில் இருக்கிற 1 சதவிகிதத்தினர் 40 சதவிகித சொத்துகளையும் குவித்து வைத்துள்ளனர். இத்தகைய சொத்து குவித்து வைத்திருப்பவர்கள் மீது கடுமையான வரி விதித்து வருமானத்தை பெருக்கி, ஏழை, எளியவர்களுக்கு பயன் தருகிற வகையில் திட்டங்களை தீட்ட வேண்டுமென்று தலைவர் ராகுல்காந்தி கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால், அத்தகைய வரி விதிப்பை அறிவித்து பொருளாதார ஏற்றத்தாழ்வை குறைக்கிற எந்த நடவடிக்கையையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுக்க தயாராக இல்லை. எனவே, ஒன்றிய அரசு என்பது அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் தான் நிதி ஒதுக்கீடுகள் அமைய வேண்டும். ஆனால், தங்களது ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள பாரபட்சமாக நிதி ஒதுக்குவது கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கிற செயலாகும்.

நீண்டகாலமாக அனைத்து நிலைகளிலும் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்று எழுப்பப்பட்ட கண்டன குரலுக்கு எந்த வகையிலும் செவி மடுக்காத ஒரு நிதிநிலை அறிக்கையை நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்திருக்கிறார். இந்த நிதிநிலை அறிக்கை வளர்ச்சிக்கு வாய்ப்பில்லாத, வேலை வாய்ப்பை பெருக்காத, சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வை சமன் செய்யாத ஒரு பிற்போக்குத்தனமான நிதிநிலை அறிக்கை என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்