அப்போ காதல் தோல்வி.. வேலை இல்லை! ஆனா இப்போ..எம்.எல்.ஏ பேச்சால் அதிர்ந்த முதல்வர் விஜய்!

சட்டப்பேரவையில் நன்றி தெரிவித்த தவெக எம்.எல்.ஏ. சபரி அயங்கரன் தனது காதல் தோல்வி முதல் கார் கிடைத்தது வரை கலகலப்பாகப் பேசி சபையை சிரிக்க வைத்தார்.

Hero Image

சென்னை : தமிழகச் சட்டமன்றத்தில் அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது மக்கள் பணிகளை எந்தவிதத் தடையுமின்றித் தொய்வின்றித் தொடரவும், தொகுதி சார்ந்த பணிகளைச் சிறப்பாகச் செயல்படுத்தவும் அரசு சார்பில் புதிய வாகனங்கள் வழங்கப்படும் எனத் தமிழக முதலமைச்சர் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பின்படி, வாகனப் பராமரிப்புக்காக மாதந்தோறும் ரூ. 75,000 வாகனப்படியும், தங்களது அலுவலகப் பணிகளுக்காக உதவியாளர் ஒருவரை நியமித்துக்கொள்வதற்கு ஊதியமாக மாதந்தோறும் ரூ. 25,000 வழங்கப்படவுள்ளது என்றும் சட்டப்பேரவையில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் இந்தச் சிறப்பான அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துச் சட்டமன்றத்தில் உரையாற்றிய பெரியகுளம் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் சபரி அயங்கரன், தனது தனித்துவமான மற்றும் கலகலப்பான நகைச்சுவை பாணியில் பேசியது அவை முழுவதும் பெரும் கவனத்தையும் சிரிப்பலையையும் ஏற்படுத்தியது.

அவர் பேசுகையில், புதிதாகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இளம் எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கி உதவிய நமது முதலமைச்சருக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், "நான் கல்லூரி காலத்தில் படிக்கும்போது காதல் தோல்வி அடைந்தேன்; அப்போது வேலையும் இல்லை, காசுமில்லை, காரும் இல்லை. ஆனால், இன்று நம் தலைவர் எனக்கு நல்லதொரு வேலையையும் கொடுத்துள்ளார், அதோடு பயணிக்கக் காரும் தந்துள்ளார்" என்று கூறி சபையைச் சிரிக்கச் வைத்தார்.

மேலும் தனது உரையில், தான் வழக்கமாகத் தொகுதியிலிருந்து இரயிலில்தான் சென்னைக்கு வருவதாகவும், அங்கிருந்து ஆட்டோவில் சட்டமன்றத்திற்குள் நுழையும்போதெல்லாம் பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவலர்கள் "யார் நீங்கள்?" என்று விசாரிப்பதாகவும் தெரிவித்தார். தான் எம்.எல்.ஏ. என்று கூறியதுடன் தனது அடையாள அட்டையைக் (ID Card) காட்டினாலும் அவர்கள் எளிதில் நம்புவதில்லை என்ற சுவாரஸ்றசியமான நினைவைப் பகிர்ந்துகொண்டார்.

இறுதியாக, விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில் ஆவின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு அவர்களும் மகிழ்ச்சியுடன் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுக்குக் கிடைத்த இந்தச் சலுகைகளால் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளதாகத் தெரிவித்தார். சபரி அயங்கரனின் இந்த மேடைப் பேச்சின் போது முதலமைச்சர் விஜய் சற்று அதிர்ந்து திரும்பிப் பார்த்த கலகலப்பான ரியாக்ஷன் தற்போது சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.