மக்கள் என்னை ஒருநாளும் கைவிட மாட்டார்கள்...ஈரோட்டில் விஜய் ஸ்பீச்!

கொள்ளை அடித்து வைத்துள்ள காசு அவர்களுக்கு துணை, எனக்கு என் மேல் பாசம் வைத்து மக்களின் மாஸ் துணை என விஜய் தெரிவித்துள்ளார்.

vijay in erode

ஈரோடு :தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் நடிகர் விஜய் இன்று ஈரோடு மாவட்டத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “மஞ்சள் என்றாலே தனி வைப் தான். மங்களகரமான மஞ்சள் விளையும் பூமி தான் ஈரோடு பூமி. மஞ்சள் வைத்துதான் நல்ல காரியங்களைத் தொடங்குவார்கள். தவெக கொடியிலும் மஞ்சள் நிறம் இருக்கிறது. ஈரோட்டில் மஞ்சள் குறித்து பேசாமல் வேறு எங்கு பேசுவது?” என்று உற்சாகமாகத் தொடங்கினார்.

காலிங்கராயன் அணை பற்றி பேசிய விஜய், “காலிங்கராயன் அணை, கால்வாயில் உயிரும் உணர்வும் உள்ளது. அணை கட்டும்போது சோர்வடைந்த காலிங்கராயனுக்கு அவரது அம்மா தைரியம் கொடுத்தார். அதே தைரியத்தை என்னுடைய அம்மாக்கள், தங்கைகள், அக்காக்கள் எனக்குக் கொடுத்திருக்கிறீர்கள்” என்று உருக்கமாகக் கூறினார். “தமிழக மக்களுக்கும் எனக்கும் இடையேயான உறவு 10 வயதில் தொடங்கியது. இதை யாராலும் பிரிக்க முடியாது.

உங்களை நம்பித்தான் வந்திருக்கிறேன். மக்கள் என்னை ஒருநாளும் கைவிட மாட்டார்கள். அதற்காக வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன்” என்று உறுதியளித்தார்.“ஆட்சியாளர்களுக்கு கொள்ளை அடித்து வைத்துள்ள காசு தான் துணை. எனக்கு மக்களின் மாஸ் துணைதான் பலம்” என்று விஜய் விமர்சித்தார். “களத்தில் இருக்கும் எதிரிகளை மட்டுமே எதிர்க்கிறோம். களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க மாட்டோம். எதிரிகள் யார் என்று சொல்லிக்கொண்டுதான் களத்திற்கு வந்துள்ளோம்” என்று தெளிவுபடுத்தினார்.

ஈரோட்டில் பிறந்த பெரியார் நமது கொள்கைத் தலைவர் என்றும், அண்ணா, எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டின் சொத்து என்றும் பாராட்டினார்.இந்தப் பிரச்சாரக் கூட்டங்கள் ஈரோடு மாவட்டத்தில் தவெகவின் செல்வாக்கை வெளிப்படுத்தின. லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால், கூட்டம் பிரம்மாண்டமாக அமைந்தது. விஜய்யின் உரை தொண்டர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. 2026 தேர்தலுக்கு முன் தவெகவின் பிரச்சாரம் தீவிரமடைந்து வருவதை இந்தக் கூட்டங்கள் உறுதிப்படுத்தின.