“துரோகம் செய்தவர் இபிஎஸ்” – கனிமொழி கடும் தாக்கு!

தன்னை காப்பாற்றியவர்கள், தன்னோடு இருந்தவர்கள் அத்தனை பேருக்கு துரோகம் செய்யக்கூடியவர் தான் எடப்பாடி பழனிசாமி என கனிமொழி தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை: திமுக எம்.பி. கனிமொழி, புதுக்கோட்டை மாவட்டம் கங்கை கொண்டானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்தார்.கனிமொழி பேசுகையில்,“எடப்பாடி பழனிச்சாமி எப்பவுமே ஒரு திட்டம் வச்சிருப்பார். யாராவது கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்குறாங்க அப்படின்னு ஆரம்பிச்சாருனாலே அவங்க பத்திரமா இருக்கணும். ஏன்னா அம்மையார் சசிகலா அவருடைய கால்ல விழுந்து தான் பதவி வாங்குனாரு. இல்லையா?

அவரே சொல்றார் பெரியவங்க கால்ல விழுந்தா என்னன்னு. நீங்க விழுந்தேன். ஆனா விழுந்த ஒரு காலைக் கொஞ்சம் பத்திரமா விடணும் இல்ல. அந்த காலை, அந்த கால் எந்தக் கால் உங்களுக்கு ஆசீர்வாதம் கொடுத்ததோ இன்னைக்கு அந்த காலுக்கே வந்து அதிமுக அலுவலகத்துல இடம் இல்லன்னு பண்ணிட்டீங்க இல்ல. இன்னைக்கு அவங்களாலே உள்ள வர முடியல.

அதிமுகல அவங்களுக்கு இடம் இல்ல என்று அந்த அம்மையாரே வருத்தப்படக்கூடிய வகையிலே அவர்களுடைய காலையே வாரி விட்டுருக்கீங்க. கூட இருந்த ஓ.பன்னீர்செல்வம் அம்மையார் ஜெயலலிதா உண்மையாகவே நம்பியது அவரைத்தான். அவங்க பதவி இறங்கிய போதெல்லாம் அவரைத் தான் ஆட்சிப் பொறுப்பில் வச்சாங்க. இன்னைக்கு அவருக்கு அங்க இடம் இல்ல. அவரே தமிழ்நாட்டை காப்பாத்தணும்னா தளபதியால மட்டும்தான் முடியும்னு சொல்லி நம்மோட தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்.

இப்படி தன்னைக் காப்பாற்றியவர்கள், தன்னோடு இருந்தவர்கள் அத்தனை பேருக்கும் துரோகம் செய்யக்கூடிய ஒருவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. அவரைப் பத்தி அவர் கூட்டணியில் இருக்கக்கூடியவர்கள் எல்லாம் என்னென்னவோ பேசியிருக்காங்க. அவரைப் பத்தி நாங்க எல்லாம் சொல்லாத வார்த்தைகளைச் சொல்லி அவரை ஏளனமாகப் பேசியவர்கள், குறைத்து பேசியவர்கள் தான் இன்னைக்கு அவரோட கூட்டணியில் இருக்காங்க.இப்படிப்பட்ட ஒரு கூட்டணி தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து துரோகம் செய்யக்கூடிய ஒரு கூட்டணி.

இந்தத் தமிழ்நாட்டை டெல்லியிலே போய் அடகு வைக்கக்கூடிய ஒரு அதிமுக. இன்னைக்கு அதிமுக அண்ணாதிமுகல இருந்து அமித்ஷா அதிமுகன்னு சொல்லக்கூடிய அளவுக்கு வந்துருச்சு” என்று கூறினார்.கனிமொழியின் இந்தப் பேச்சு, தேர்தல் பிரச்சாரத்தின் ஓர் முக்கிய அங்கமாக அமைந்துள்ளது. அதிமுக-பாஜக கூட்டணியை கடுமையாகத் தாக்கிய அவர், திமுக கூட்டணியின் வெற்றிக்கு மக்களிடம் வலுவான ஆதரவு இருப்பதாகவும் வலியுறுத்தினார்.