"என் கோரிக்கையை ஏற்றால்தான்.., இபிஎஸ் பரப்புரையில் பங்கேற்பேன்" – செங்கோட்டையன் எச்சரிக்கை!

எனது கோரிக்கையை ஏற்றால்தான். எடப்பாடி பழனிசாமியின் பரப்புரையில் பங்கேற்பேன் என செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Sengottaiyan -EPS

கோபிசெட்டிபாளையம் :முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான கே.ஏ. செங்கோட்டையன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி தெரிவித்து, கட்சி ஒற்றுமைக்காக வெளியே சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார்.

இன்றைய தினம் கோபிசெட்டிபாளையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், “கட்சி ஒன்றுபட வேண்டும். வெளியே சென்றவர்களை அரவணைத்தால் மட்டுமே தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியும். என் கோரிக்கையை ஏற்றால் மட்டுமே இபிஎஸ் பரப்புரையில் பங்கேற்பேன். பத்து நாட்களுக்குள் கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும், இல்லையெனில் ஒத்த கருத்துடையவர்களுடன் முயற்சிகளில் இறங்குவேன்” என்று எச்சரித்தார்.

மேலும், அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை ஏற்றால்தான். எடப்பாடி பழனிசாமியின் பரப்புரையில் பங்கேற்பேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இது, செங்கோட்டையனுக்கும் இபிஎஸ்ஸுக்கும் இடையே நீடித்து வரும் உட்கட்சி மோதலின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது.

முன்னதாக, இபிஎஸ்ஸின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” பரப்புரை தொடக்க விழாவை செங்கோட்டையன் புறக்கணித்ததாகவும், அத்திக்கடவு-அவினாசி திட்ட பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லாததால் அதிருப்தி அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.