நேரு பற்றி அவதூறு பேச்சு: “அவரை கைது செய்ய வேண்டும்” செல்வப்பெருந்தகை கோரிக்கை!

நேருவின் நன்மதிப்பை குலைக்கும் ‘ஸ்டாண்ட் அப் காமெடி பரத் பாலாஜியை கைது செய்ய செல்வப்பெருந்தகை கோரிக்கை விடுத்துள்ளார்.

Selvaperunthagai -bharth balaji

சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி (STANDUP COMEDY) என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத் பாலாஜி என்பவரின் வீடியோ இணையத்தில் வெளியாகி வருகிறது. இதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்து வருகிறது.

அந்த வகையில், காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது கடும் கண்டனத்தை தெரிவித்திருப்பதோடு, பரத் பாலாஜியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில், சமூக ஊடகங்களில் ‘ஸ்டாண்ட் அப் காமெடி” என்ற பெயரில், பரத் பாலாஜி என்பவர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் பாரத ரத்னா பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களை மிக மிக இழிவாக கீழ்த்தரமான முறையில் கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார்.

உலக நாடுகளில் உள்ள அனைத்து தலைவர்களாலும் போற்றி பாராட்டப்பட்ட பண்டித நேருவை இத்தகைய முறையில் இழிவாக பேசுவதை எவரும் அனுமதிக்க முடியாது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். பண்டித நேருவை தரம் தாழ்ந்த நரகல் நடையில் இழிவாக பேசிய பரத் பாலாஜியை காவல்துறையினர் கைது செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இத்தகைய அவதூறு பேச்சுக்கள் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினரின் மனதை புண்படுத்தியதோடு, கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, இதுபோன்ற நாகரீகமற்ற பேச்சுக்கள் சமூக ஊடகங்களில் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு காவல்துறையை சேர்ந்த சைபர் கிரைம் பிரிவினருக்கு இருப்பதை வலியுறுத்த விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்