மாமல்லபுரம்:பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 9, 2025 அன்று மாமல்லபுரத்தில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அன்புமணி தனது தலைமைப் பதவி தொடர்பாகவும், கட்சி நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ் குறித்தும் உருக்கமாகவும், உறுதியாகவும் பேசினார்.
பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி “ராமதாஸால் தற்போது பாமகவை நிர்வகிக்க முடியாத சூழல் நிலவுகிறது. சில செய்திகளை வெளியே சொல்ல முடியாது,” என்று கூறி, கட்சியின் உள் இயக்கங்கள் குறித்து மறைமுகமாக குறிப்பிட்டார்.அன்புமணி, ராமதாஸைப் பற்றி பேசுகையில், “அய்யாவைச் சுற்றி சில சுயநலவாதிகளும், தீய சக்திகளும் இருக்கின்றனர். அவர்கள் நான் சொல்லாதவற்றை அவரிடம் திரித்து கூறுகின்றனர். உருவத்தில் இல்லையென்றாலும், உள்ளத்தில் மருத்துவர் ராமதாஸ் நம்முடன்தான் இருக்கிறார்,” என்று உருக்கமாக தெரிவித்தார்.
இந்தப் பேச்சு, ராமதாஸின் பங்கேற்பின்மை மற்றும் அவருக்கு ஒதுக்கப்பட்ட காலி நாற்காலி குறித்து எழுந்த விவாதங்களுக்கு மறைமுக பதிலாக அமைந்தது.அன்புமணி, தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி, “இப்படி நடக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. நான் பிடிவாதமாக இல்லை, உறுதியாக இருக்கிறேன். நிறைய விஷயங்களை சொல்ல விரும்புகிறேன், ஆனால் சொல்ல முடியவில்லை,” என்று கூறினார்.
மேலும், தொடர்ந்து பேசிய அவர் ” ஐயா ராமதாஸ் நாற்காலி எப்போதுமே நிரந்தரமாக அவருக்குக்காகவே இருக்கும். அவர் எப்போது வேண்டுமானாலும் வரலாம். வருவார் என்று நான் நம்புகிறேன். சில நேரங்களில் சாமிக்கு கோபம் வந்துவிடும். அப்படி கோபம் வந்ததும் நாம் என்ன பண்ணுவோம் திருவிழா எடுத்து செய்வோம். இதில் என்ன பிரச்சினை என்றால் பூசாரி தான்.
நாம் சாமிக்கு தேவையான விஷயங்கள் அனைத்தையும் செய்வோம். ஆனால், இந்த பூசாரி தான் பிரச்சினை. நாம் அனைவரும் கற்றுக்கொண்டது ஐயாவிடம் தான். பல விஷயங்களை அவரிடம் இருந்து தான் கற்றுக்கொண்டோம். ஆனால், இன்றைக்கு ஐயாவால் இந்த இயக்கத்தை நடத்தி கொண்டுசெல்ல முடியவில்லை” எனவும் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” இங்கு வந்திருக்கும் அனைவருடைய வலியும் எனக்கு புரிகிறது. ஆனால், எல்லாரையும் விட எனக்கு தான் வலி அதிகமாக இருக்கிறது. அவ்வளவு வலியை தாங்கி கொண்டு இருக்கிறேன். வலியால் நான் தூங்கியே நாள் ஆகிவிட்டது. ஒரு பக்கம் தினமும் ஒரு செய்தி வந்துகொண்டு இருக்கிறது. நம்மளை பற்றி என்னை பற்றி செய்திகளை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். இரண்டு பேர் சேர்ந்துபோட்டால் தான் சண்டை நேற்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது எனக்கு சுத்தமாக மகிழ்ச்சி இல்லை. மனதில் அவ்வளவு வலியுடன் தான் இந்த தீர்ப்பை எதிர்கொண்டேன்” எனவும் அன்புமணி வேதனையுடன் தெரிவித்தார்.
