சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி அன்று மதுரை பாரபத்தியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தவெக தலைவர் விஜய், தேமுதிக நிறுவனர் விஜயகாந்தை “என் அண்ணன்” என உருக்கமாக குறிப்பிட்டு, அவரைப் போற்றி பேசினார். திமுகவை அரசியல் எதிரியாகவும், பாஜகவை கொள்கை எதிரியாகவும் குறிப்பிட்ட விஜய், மறைமுகமாக அதிமுகவையும் விமர்சித்தார். முதல்வர் மு.க. ஸ்டாலினை “அங்கிள்” என குறிப்பிட்டு, அவரது ஆட்சியில் நேர்மை, பெண்கள் பாதுகாப்பு, மற்றும் சட்டம் ஒழுங்கு இல்லை என கடுமையாக சாடினார்.
விஜயகாந்தைப் பற்றிய அவரது பேச்சு, அரசியல் விவாதங்களை தூண்டியது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய்யின் மாநாட்டு உரை குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். “விஜய், அண்ணா தோற்றுவித்த கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்கிறார். 60 ஆண்டுகளாக எம்ஜிஆர் மற்றும் அண்ணாவின் கட்சிகளே ஆட்சி செய்கின்றன. விஜயகாந்தின் புகைப்படத்தை வைத்து அரசியல் செய்ய முயல்கிறார். அடுத்து ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி புகைப்படங்களையும் வைப்பாரா? அவருக்கு பின்னால் திரண்டவர்கள் அவருக்கு நண்பர்களாக இருக்கலாம், ஆனால் எங்களுக்கு தம்பி-தங்கைகளாகவே உள்ளனர்,” என கிண்டலாக பதிலளித்தார்.
இதனைத்தொடர்ந்து, விஜய்யின் பேச்சு தவெகவின் அரசியல் உத்தியை வெளிப்படுத்துவதாகவும், அது விஜயகாந்தின் மரபை பயன்படுத்துவதாகவும் சீமான் குறிப்பிட்டார்.தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விஜய்யின் மாநாட்டு பேச்சுக்கு கடலூரில் பதிலளித்தார். “ஒருநாளும் யாரும் விஜயகாந்தாக மாற முடியாது. விஜயகாந்தின் வாக்குகளை பிரிக்க விஜய் முயல்வதாக இருந்தால், மக்களும் தேமுதிகவினரும் அதை பொருட்படுத்த மாட்டார்கள். அன்பின் வெளிப்பாடாக விஜயகாந்தை அண்ணன் என அழைத்தது தம்பியின் உணர்வு. ஆனால், தவெக அரசியல் ரீதியாக இதை அணுகினால், அது தவறு,” என திட்டவட்டமாக கூறினார்.
மேலும், “விஜயகாந்தின் படத்தையும் பெயரையும் அரசியலுக்கு பயன்படுத்தினால், மக்கள் ஏற்க மாட்டார்கள். எங்களுக்கு தனி இயக்கம் உள்ளது, விஜயகாந்துக்கு நிகர் அவரே, அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது,” என வலியுறுத்தினார்.சீமானின் கருத்துக்கு பதிலளித்த பிரேமலதா, “விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தபோது அவரை அண்ணனாக பார்க்கவில்லையா? இது உலகம் அறிந்த உண்மை. விஜய் அதை உரக்க சொல்லியிருக்கிறார்,” என கூறினார்.
