கரூர் :கடந்த செப்டம்பர் 27 அன்று கரூரில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் பிரசாரத்தின் போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது, இந்த துயர சம்பவத்தை விசாரிக்க புதிய விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், சம்பவத்தை கரூர் ஏடிஎஸ்பி பிரேமானந்தன் விசாரிப்பார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக விசாரணை அதிகாரியாக கரூர் நகர காவல் நிலைய டிஎஸ்பி செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூற விஜய், ஆதவ், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் முடிவு எடுத்திருப்பதாக நேற்று தகவல் வெளியானது.
அதனை உறுதி செய்யும் வகையில், கரூர் செல்ல பாதுகாப்பு கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆதவ் அர்ஜூனா மனுத்தாக்கல் செய்துள்ளார். பாதுகாப்பு உறுதியான உடனே விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் கரூர் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
