தஞ்சாவூர்:கரூர் வேலுச்சாமிபுரம் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் (செப்டம்பர் 27, 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை விளக்கி, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். “கரூரில் நடந்தது விபத்துதான். எந்த தலைவரும் தனது தொண்டர்கள் இறப்பை விரும்ப மாட்டார்கள். முதலமைச்சர் ஸ்டாலினின் கருத்து சரி. தவெக தலைவர் தார்மீகப் பொறுப்பு ஏற்க வேண்டும். அப்படி செய்திருந்தால் நீதிமன்றம் கண்டனம் தெரிவிக்கவில்லை,” என்று தினகரன் கூறினார்.
தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் பேச்சை “பொறுப்பற்றது” என்று கண்டித்த அவர், சீமானை “உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக கையாள்கிறார்” என்று பாராட்டினார். தினகரன் மேலும், “எடப்பாடி பழனிச்சாமி ருசி கண்ட பூனை மாதிரி, பதவி வெறியில் இருக்கிறார். அதிமுக போல் பாஜகவும் அரசியல் செய்வது வருத்தம் தருகிறது. தூத்துக்குடிக்கு குழு அனுப்பாத பாஜக, கரூருக்கு மட்டும் அனுப்பியது ஏன்? ஆளும் கட்சிதான் குறை என்று இ.பி.எஸ். பேசுவது தரம் தாழ்ந்த அரசியல்,” என்று விமர்சித்தார்.
மேலும், “ஆடு நனையுதேனு ஓநாய் அழுவது போல் தவெகவுக்காக வக்கீல் போல் வாதாடுகிறார் எடப்பாடி,” என்று கிண்டலடித்தார். அதே சமயம், முதலமைச்சரின் நடவடிக்கையை “நீண்ட அரசியல் அனுபவத்தை காட்டியது” என்று பாராட்டினார்.“அரசை ஆதரிக்கவில்லை, ஆனால் நம்புகிறேன். எல்லா அழுத்தங்களுக்கும் அப்பால் முதல்வர் பெருந்தன்மையுடன் செயல்பட்டார். வருங்காலத்தில் இது நடக்கக்கூடாது என்ற பொறுப்புணர்வு தென்பட்டது,” என்று தினகரன் தெரிவித்தார்.
இந்த சம்பவத்திற்கு தவெகவின் பொறுப்பு அதிகம் என்று வலியுறுத்திய அவர், “மற்ற மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தபோது பிரச்சினை இல்லை என்று சொன்னால், அந்த மாவட்டங்களும் தமிழ்நாட்டில் தான் உள்ளன. அதிமுக ஆட்சியிலும் திமுக ஆட்சியிலும் அது நடந்தது. இந்த ஒப்பீடே தவறு,” என்றும் டிடிவி தினகரன் கூறினார்.
