"அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை 10 நாட்களுக்குள் ஒருங்கிணைக்க கெடு" – செங்கோட்டையன்.!

கட்சியில் இருந்து விலகியவர்களை (ஓபிஎஸ், சசிகலா, டிடிவி) மீண்டும் இணைக்க இபிஎஸ்-க்கு செங்கோட்டையன் கெடு விதித்துள்ளார்.

Featured image

கோபிசெட்டிபாளையம் :முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான கே.ஏ. செங்கோட்டையன், கட்சியில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க 10 நாட்கள் கெடு விதித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான K.A.செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். இபிஎஸ் மீது நீண்ட காலமாக அதிருப்தியில் இருக்கும் அவர், என்ன பேசப்போகிறார் என்பதை அறிய அதிமுகவினர் மட்டுமின்றி, ஒட்டுமொத்த அரசியல் களமே காத்திருந்த நிலையில், அதற்கு முன்னதாக ரோடு ஷோ நடத்தி டிவிஸ்ட் கொடுத்தார்.

செய்தியாளர்களை சந்திக்கும் முன், செங்கோட்டையன் பிரமாண்ட ரோடு ஷோவை நடத்தினார். அவரது வீட்டில் இருந்து கட்சி அலுவலகம் வரை, சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆதரவாளர்கள் வைத்துள்ள பேனர்களில் இபிஎஸ் புகைப்படம் இடம் பெறவில்லை.

செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், ”1972-ல் கிளைச் செயலாளராக பணியை தொடங்கிய தன்னை 1975-ல் பொருளாளராக நியமித்து அழகு பார்த்தவர் எம்ஜிஆர் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில், தனக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருந்தது என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், அதிமுகவில் இருந்து யாரேனும் விலகினால் அவர்களது வீடு தேடிச் சென்று எம்ஜிஆர் சமாதானம் செய்வார் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 2017-ல் கட்சிக்கு கடுமையான சோதனைகள் ஏற்பட்டபோது, முன்னாள் முதல்வர், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுத்தோம் என இபிஎஸ் பெயரை கூறாமல் தனது கருத்தை கூறினார். அதிமுக உடையக் கூடாது என்பதற்காக தனக்கு வந்த வாய்ப்புகளை எல்லாம் தியாகம் செய்ததாக வேதனையுடன் கூறியுள்ளார்.

2026 தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுகவாக தேர்தலில் சந்தித்தால்தான் வெற்றி பெற முடியும் என கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கருதுவதாகவும் கூறியுள்ளார். 10 நாள்களுக்குள் நல்ல முடிவை எடுக்காவிட்டால் ஒத்த கருத்துடைய தலைவர்களை ஒன்றிணைத்து, ஒருங்கிணைப்பு பணியை செய்வோம் என திட்டவட்டமாக கூறியுள்ளார். இது, எடப்பாடி பழனிசாமியுடனான அவரது நீண்டகால மோதலுக்கு மத்தியில், கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.