கரூர் : கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்குவது என்பது அரசின் முழுக்க முழுக்கக் கொள்கை முடிவு என்றும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டுதான் அரசுப் பணி வழங்கும் விவகாரத்தில் அரசு செயல்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தை காவல்துறை சரியாகக் கையாளாததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டே இந்த அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கும், மதுரை லீலாவதி கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் இதற்கு முன்பு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளதை அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) முன் அனுமதி தேவையில்லை எனத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வாதாடிய அரசு தலைமை வழக்கறிஞர், அரசு உரிய கொள்கை முடிவு எடுத்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தின் அவசரத் தேவைகள் மற்றும் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு கருணை அடிப்படையில் இந்தப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.
வழக்குத் தொடர்ந்த மனுதாரர் தரப்பில், தமிழ்நாட்டில் சுமார் 39 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றித் தவித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஸ்டெர்லைட் போன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உரிய முறையில் அரசுப் பணி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
