கரூர் துயரம்: "இரவில் பிரேத பரிசோதனை செய்யலாம்" – தமிழ்நாடு அரசின் சரிபார்ப்பகம்.!

2021ல் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் இரவு நேரம் பிரேத பரிசோதனை செய்யலாம் என்றும் அதற்கு விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டடுள்ளன.

TN Govt -Karur

சென்னை :நேற்று முன் தினம், கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் நடந்த நாளன்று 6 மணிக்கு மேல் பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்று விதிமுறைகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவியது.

அதாவது, இறந்தவர்களுக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும்? ஒரே நேரத்தில் உயிரிழந்த அனைவருக்கும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது ஏன்? என வலைதளங்களில் செய்தி பரவுகிறது. இந்நிலையில், இந்த கேள்விக்கு தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

அதன்படி, 2021 நவ.15ம் தேதி ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்ட அலுவலக குறிப்புரையில் இரவில் பிரேத பரிசோதனை செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் இருந்தால் போதுமானது.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் நிலையிலும் இரவில் பிரேத பரிசோதனை செய்யலாம். எனவே, இரவு நேரத்தில் பிரேத பரிசோதனையை தொடர்ந்து நடத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட மருத்துவமனைகளில் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், கொலை, தற்கொலை, பாலியல் வன்கொடுமை, சிதைந்த உடல்கள், சந்தேகிக்கப்படும் துஷ்பிரயோகம் போன்ற பிரிவுகளின் கீழ் உள்ள வழக்குகளை இரவு நேர பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தக்கூடாது. எந்தவொரு சந்தேகத்தையும் நிராகரிக்க, இரவு முழுவதும் பிரேத பரிசோதனையின் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என்பதையும், சட்ட நோக்கங்களுக்காக எதிர்கால குறிப்புக்காகப் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டு” என தெரிவிக்கப்பட்டுள்ளது.