எடப்பாடி பழனிசாமியையும் சந்திக்க வேண்டும் என முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைத்துள்ளேன் - திருமாவளவன்!

இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக என விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த பின் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவனை இன்று வேளச்சேரியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.விசிகவின் ஆதரவுக்குப் பிறகு இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற முதல் நேரடி சந்திப்பு இதுவாகும்.

இந்த சந்திப்பின்போது, முதலமைச்சர் விஜய்க்கு அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை (Preamble of the Constitution) அடங்கிய புகைப்படத்தை திருமாவளவன் பரிசாக வழங்கினார்.சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த திருமாவளவன், “எடப்பாடி பழனிசாமியையும் நேரில் சந்திக்க வேண்டும் என முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை வைத்துள்ளேன்” என்றார்.

மேலும் அவர் கூறியதாவது“நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் வாழ்த்தினோம். அனைத்து கட்சித் தலைவர்களையும், குறிப்பாக முன்னாள் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை அவர்களது இல்லத்திலேயே சென்று சந்தித்து ஒரு புதிய வரலாறு படைத்ததை சுட்டிக்காட்டி அவரைப் பாராட்டினோம்.

அதேபோல ஆதரவளித்த அனைத்து தோழமை கட்சிகளுக்கும் — காங்கிரஸ், இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளைச் சார்ந்த தலைவர்களை அவரவர் இல்லங்களில் சென்று சந்தித்து நன்றியைத் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, அதிமுகவில் நடைபெறும் உட்கட்சி பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “அதில் நான் கருத்து சொல்ல இயலாது. முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில் அமைந்துள்ள அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களது விழைவு” என்றார்.

திருமாவளவன் தொடர்ந்து, “என்னுடைய கடந்த காலத்தைப் பற்றி அவரிடம் பகிர்ந்து கொண்டோம். இந்த அலுவலகத்தில்தான் நான் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கியிருக்கிறேன் என்று சொன்னேன்” என்றும் தெரிவித்தார். இந்தச் சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் நல்லிணக்கத்தையும், புதிய அரசியல் அணுகுமுறையையும் வெளிப்படுத்தியதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. முதலமைச்சர் விஜய் தொடர்ந்து முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.