சென்னை :தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அதிகாலையில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான புகாரில், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரின் இல்லம், எம்எல்ஏ விடுதி, திண்டுக்கலில் உள்ள இல்லம், அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெறுகிறது. மேலும், அமைச்சர் மற்றும் அவரின் குடும்பத்தினரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சோதனைகள் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மற்றும் பணமோசடி தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, சென்னை, பசுமை வழிச்சாலை அமைச்சர் ஐ. பெரியசாமியின் இல்லமான ரோஜா இல்லத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.
இங்கு அதிகாரிகள் காலை 7:30 மணி முதல் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், முதற்கட்டமாக காவலர்கள் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து, திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் (எம்.எல்.ஏ. விடுதி) அமைச்சருக்கு தொடர்புடைய அறைகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
மேலும், திண்டுக்கல், கோவிந்தாபுரம் அமைச்சரின் இல்லத்தில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், அவரது மனைவி சுசீஸாவிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் உள்ளன. அதுமட்டுமின்றி, திண்டுக்கல் சிவாகி நகரில் அமைச்சரின் மகள் இந்திராவின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், திண்டுக்கல் சீலப்பாடியில் அமைச்சரின் மகனும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஜ.பி. செந்தில்குமாரின் வீட்டில் தீவிர சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த சோதனைகள் திமுக தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
