"திமுக என் மீது அவதூறு பரப்புகிறது.," நடிகை கஸ்தூரி பரபரப்பு குற்றசாட்டு.! 

நான் தெலுங்கர்கள் பற்றி பேசியதை, அவதூறு பரப்பும் நோக்கில் திமுக ட்ரெண்டிங் செய்து வருகிறது என நடிகை கஸ்தூரி தனது எக்ஸ் சமூக வளைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Actress Kasturi Shankar

சென்னை :நேற்று சென்னையில், பிராமணர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி பேசுகையில், ” ராஜாக்கள் காலத்தில் அந்தப்புரத்து மகளிர் சேவைகள் செய்ய வந்த தெலுங்கு பேசுபவர்கள் எல்லாம் இன்று தமிழர்கள் இனம் என்று சொல்லி கொண்டிருக்கிறார்கள். அப்படியென்றால் அதற்கு முன்னர் வந்த பிராமணர்கள் தமிழர்கள் இல்லையா .? இங்கே யார் தமிழர்கள்.? ” என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

தெலுங்கு பேசுபவர்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கஸ்தூரியின் கருத்துக்கள் கடும் கண்டனங்களை பெற்று வருகின்றன. இப்பேச்சு குறித்து பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூறுகையில், “கஸ்தூரியின் இழிவான பேச்சுக்கு கண்டனங்கள், அவர், தமது கருத்தை திரும்பப் பெற வேண்டும். மேலும், தெலுங்கு பேசும் மக்களிடம் கஸ்தூரி மன்னிப்பு கேட்க வேண்டும். சகோதரர்களாக பழகிவரும் தமிழ் – தெலுங்கு பேசும் மக்களுக்கு இடையேயான ஒற்றுமையை பாதிக்கும் வண்ணம் கஸ்தூரி பேச்சுக்கள் அமைந்துள்ளன.” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த சர்ச்சை கருத்துக்கள் குறித்து நடிகை கஸ்தூரி ஏற்கனவே தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், “நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. தவறான தகவல்களை பரப்பாதீர்கள்” என பதிவிட்டு இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது அவர் பதிவிடுகையில், “தமிழர்களிடையே பிளவுபடுத்தும் வெறுப்பு அரசியல்செய்யும் மோசடி திராவிட புலம்பெயர்ந்த ஏமாளிகளின் இரட்டை நிலைப்பாட்டை நேற்று அம்பலப்படுத்தினேன். அவர்கள் இன்று எனது தெலுங்கு விசுவாசத்தைப் பற்றி அவதூறாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். திமுக இணையதள அமைப்பு என் மீது அவதூறு ஏற்படுத்த முயல்கிறது. தெலுங்கர்களுக்கு எதிராக நான் பேசியதாக போலியான செய்திகளை அவர்கள் டிரெண்டிங் செய்து வருகின்றனர். ” என தான் பேசியது தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்ற விளக்கத்தையும், தன் மீது திமுக அவதூறு பரப்புகிறது என விமர்சனத்தையும் அவர் முன்வைத்துள்ளார்.

unknown node