ஆளுநரின் தேநீர் விருந்து – முதலமைச்சர் ஸ்டாலின் புறக்கணிப்பு.!

சுதந்திர தினத்தையொட்டி நாளை மாலை ராஜ்பவனில் நடக்கவுள்ள தேநீர் விருந்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணித்துள்ளார்.

MK Stalin - RN Ravi

சென்னை :தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை (ஆகஸ்ட் 15, 2025) சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை ராஜ்பவனில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.

தமிழக ஆளுநரின் போக்கை எதிர்த்து சுதந்திர தின தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கமாட்டார். மேலும், முதல்வரின் அறிவுறுத்தலின்படி நானும் ஆகஸ்ட் 18, 19 தேதிகளில் நடைபெறவுள்ள அழகப்பா மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழங்களின் பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்கப் போவதில்லை என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே நிலவும் தொடர்ச்சியான மோதல்களின் பின்னணியில் எடுக்கப்பட்டதாக கருதப்படுகிறது. குறிப்பாக, தஞ்சாவூர் கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது, பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனத்தில் தாமதம் உள்ளிட்ட ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பாக இந்த புறக்கணிப்பு இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று மரபாக நடக்கும் இவ்விழாவை ஏற்கெனவே, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. மறுபுறம், அதிமுக மற்றும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.