சென்னை: அதிமுகவில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியை சட்டமன்றக் குழுத் தலைவராக்கக் கோரி 17 எம்எல்ஏக்கள் சட்டமன்ற செயலரிடம் மனு அளித்துள்ளனர். மொத்தம் 47 அதிமுக எம்எல்ஏக்களில் இதுவரை 17 பேர் மட்டுமே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக மனு அளித்துள்ளனர்.
இதேவேளையில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையிலான அணி தனியாக ஆலோசனை நடத்தி, எஸ்.பி. வேலுமணியை சட்டமன்றக் குழுத் தலைவராகவும், ஹரியை துணைத் தலைவராகவும், சி. விஜயபாஸ்கரை கொறடாவாகவும், காமராஜை செயலாளராகவும் தேர்வு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தபோது, “தொடர்ச்சியாக தேர்தல்களில் தோல்வியை சந்தித்து வருகிறோம். இதில் யாரும் தனிப்பட்ட குற்றவாளி இல்லை. நாங்கள் அனைவரும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறோம். அதிமுகவை உடைக்க வேண்டும் என்கிற எண்ணம் எங்களுக்கு இல்லை. அதிமுக உடைய நாங்கள் காரணமாக இருக்க மாட்டோம்” என்றார்.
மேலும், “கட்சிக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும். தொண்டர்களைக் காப்பாற்ற வேண்டும். எனவே பொதுக்குழுவை விரைவில் கூட்ட வேண்டும்” என எடப்பாடி பழனிசாமியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்ததாகவும், அதை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டினார். “திமுகவை எதிர்த்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் செய்து வரும் நாங்கள், திமுகவுடன் இணைவது சாத்தியமில்லை” என்றும் அவர் வலியுறுத்தினார்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில், வரும் 13ஆம் தேதி புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழலில், அதிமுக எம்எல்ஏக்களின் நிலைப்பாடு மிக முக்கியமானதாக மாறியுள்ளது. அதே சமயம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி தவெக அரசுக்கு அதிமுக ஆதரவு அளிப்பதாக சி.வி.சண்முகம் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
