சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகளின் சரமாரி கேள்வி...முதலமைச்சர் விஜய் மௌனம்!

சட்டம் ஒழுங்கு துறையைக் தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர் விஜய், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாகப் பதிலளிக்காமல் மௌனம் காத்தது பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Hero Image

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது, சட்டம் ஒழுங்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். ஆனால், உள்துறை பொறுப்பையும் வகிக்கும் முதலமைச்சர் விஜய் நேரடியாக பதிலளிக்காதது அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள், மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு சம்பவங்கள், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பினர். வழக்கமாக இதுபோன்ற கேள்விகளுக்கு உள்துறையை கவனிக்கும் முதலமைச்சரே பதிலளிப்பது நடைமுறையாக இருந்தாலும், இந்த முறை முதலமைச்சர் விஜய் பதிலளிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

அதற்கு பதிலாக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் மட்டுமே சில கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர். இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், தவெக அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை, விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்வது உள்ளிட்ட திட்டங்கள் எப்போது நடைமுறைக்கு வரும் எனவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களான சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் ஆகியோர் பதிலளிக்கவில்லை என்றும், அதற்கு பதிலாக வேறு அமைச்சர்களே விளக்கம் அளித்ததாகவும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டின.

விவாதத்தின் போது, "ஆளுநர் உரை தொடர்பாகவே உறுப்பினர்கள் பேச வேண்டும்" என அமைச்சர்கள் ராஜ்குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், "எம்.எல்.ஏ.க்கள் என்ன பேச வேண்டும் என்பதை அமைச்சர்கள் தீர்மானிக்க முடியாது" என பதிலடி கொடுத்தனர்.

இதற்கிடையில், காவிரி விவகாரம் தொடர்பாக மேகதாது அணைக்கு எதிராக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் போது, நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் உரையாற்றாததும் கவனத்தை ஈர்த்தது.

சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரிலேயே ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கடும் வாக்குவாதங்கள் நடைபெற்றுள்ள நிலையில், வரும் நாட்களில் மேலும் தீவிரமான அரசியல் விவாதங்கள் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகளின் சரமாரி கேள்வி...முதலமைச்சர் விஜய் மௌனம்!