சென்னை :பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பொதுக்குழு கூட்டம் இன்று மாமல்லபுரத்தில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இந்தக் கூட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அன்புமணி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 2026 வரை கட்சியின் தலைவராக தொடர்வார் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், வடிவேல் ராவணன் பொதுச் செயலாளராகவும், திலகபாமா பொருளாளராகவும் தொடர்ந்து பணியாற்றுவர் என முடிவு செய்யப்பட்டது. அன்புமணி, தான் தலைவராக தொடர்வேன் என்று ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், பொதுக்குழு இந்த முடிவை ஒருமனதாக உறுதிப்படுத்தியது. கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை வீழ்த்துவதற்கு உறுதி எடுக்கப்பட்டது. திமுக ஆட்சியில் வீட்டு வரி, குடிநீர் வரி, மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும், திமுக ஆட்சியில் தமிழகத்தில் இதுவரை 7,000 படுகொலைகள் நடந்துள்ளதாகவும், இதற்கு எதிராக மக்களை ஒருங்கிணைத்து தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக, கட்சி நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், அன்புமணி கூட்டிய பொதுக்குழுவுக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், ஆகஸ்ட் 8, 2025 அன்று நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அந்த மனுவை தள்ளுபடி செய்ததால், கூட்டம் தடையின்றி நடைபெற்றது. ராமதாஸுக்கு அன்புமணி அழைப்பு விடுத்திருந்த போதிலும், அவர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை, மேலும் அவருக்கு ஒதுக்கப்பட்ட நாற்காலி காலியாக இருந்தது. ராமதாஸ் வருவார் நிலைமை சரியாகும் என பாமக தொண்டர்கள் மகிழ்ச்சியில் இருந்த நிலையில், அவர் வராதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
