அதிமுக – தவெக கூட்டணி? சூசகமாக பேசிய ஆர்.பி.உதயகுமார்!

நல்லது எங்கிருந்தாலும் அதை ஆதரிப்பதுதான் அதிமுகவின் கொள்கை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியுள்ளார்.

Featured image

மதுரை :இன்று (நவம்பர் 7, 2025) செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போது கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளருமான ஆர்.பி. உதயகுமார், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் விஜய் அதிமுகவுக்கு நன்றி தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்தார். கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆதரவாக அதிமுக நின்றது குறித்து கேட்கப்பட்டபோது, “நல்லது எங்கிருந்தாலும் அதை ஆதரிப்பதுதான் அதிமுகவின் கொள்கை. நீங்கள் நன்றி சொல்லவில்லை என்றால் அதற்கு நான் பொறுப்பல்ல. நல்லது நடக்க வேண்டும், அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்” என்று தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் கரூர் சம்பவம் தொடர்பாக உண்மைகளை வெளிப்படுத்தியதாகவும், மக்கள் கேள்வி கேட்கவே எம்.எல்.ஏக்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றும் அவர் வலியுறுத்தினார். தவெக பொதுக்குழுவில் விஜய் “திமுக vs தவெக இடையேதான் போட்டி” என்று கூறியது குறித்து கேட்கப்பட்டபோது, “எல்லோருக்கும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம்தான் இருக்கும். யாரும் தோல்வியடைய வேண்டும் என்று இறங்க மாட்டார்கள். விஜய் புதிதாக கட்சி தொடங்கியுள்ளார், தனது தொண்டர்களை உற்சாகப்படுத்தவே அவ்வாறு பேசியிருப்பார்” என்று ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

இது விஜயின் அறிக்கையை அரசியல் உத்தியாகவே பார்க்கும் அதிமுகவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது.கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று சூசகமாக பதிலளித்த ஆர்.பி. உதயகுமார், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் தவெகவுடன் கூட்டணி வாய்ப்பு இருப்பதாக செய்திகள் பரவிக்கொண்டு இருக்கும் சூழலில் அவர் இவ்வாறு பேசியிருக்கிறார்.

அதனைத்தொடர்ந்து, அதிமுகவை அபகரிக்க முயன்றவர் தினகரன்; அது முடியாததால் ஏதேதோ பேசுகிறார் வேதனை, இயலாமை, விரக்தியின் உச்சத்தில் தினகரன் இருக்கிறார் எனவும்,  திமுகவிற்கு மறைமுக பாராட்டு பத்திரம் கொடுக்கிறார் டிடிவி தினகரன் எனவும் விமர்சித்து பேசினார்.