சென்னை :தமிழக வெற்றிக்கழகத்தின் (தவெக) நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் போனதற்கு திமுக மிரட்டியது என்று கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஆதவ் அர்ஜுனா தனது பேட்டியில், “ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை தடுக்க திமுக மிரட்டியது. அதனால் அவர் பயந்து பின்வாங்கினார்” என்று கூறியிருந்தார். இந்தக் கருத்து ரஜினியின் ரசிகர்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் கடும் எதிர்ப்பை சந்தித்தது.
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கூறிய “ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் போனதற்கு திமுக மிரட்டியது” என்ற கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் கூறியதாவது: “ரஜினிகாந்த் அரசியல் அதிகாரம், ஆட்சி போன்றவற்றுக்கு மயங்கக்கூடியவர் அல்ல. அவர் அந்த நிலையிலிருந்து வெளியேறிவிட்டார். விலகி நிற்கிறார். அவரை யாரும் ஆசை காட்டி மயக்க முடியாது. அச்சுறுத்தி வெளியேற்றவும் முடியாது. அந்த ஆளுமையை அவர் எட்டிவிட்டார்.”மேலும், “ரஜினியை திமுக அச்சுறுத்தியது என்றும், அதனால் அவர் பயந்து பின்வாங்கினார் என்றும் சொல்வது வெறும் கற்பனை. அது ரஜினிகாந்தின் ஆளுமையையே கொச்சைப்படுத்தும் விமர்சனம்” என்று திருமாவளவன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ரஜினிகாந்தை நேரில் சந்தித்து உரையாடிய அனுபவத்தின் அடிப்படையில் இந்தக் கருத்தை தெரிவிப்பதாகவும், அவர் அரசியல் அதிகாரத்துக்கு ஆர்வம் காட்டுபவர் அல்ல என்றும் திருமாவளவன் வலியுறுத்தினார். “அவர் ரசிகர்கள் விருப்பத்திற்காக கட்சி தொடங்க நினைத்தது உண்மைதான். ஆனால் வலதுசாரி சக்திகள், சங் பரிவார் ஆதிக்கம் மேலோங்கி வரும் சூழலில் அது உகந்ததல்ல என்று தீர்க்கதரிசனமாக உணர்ந்து கைவிட்டார்” என்று விளக்கினார்.இந்த விவாதம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
