ராமேஸ்வரம் :நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, பருத்தித்துறை அருகே இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர். அத்துடன் ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.
தற்போது, சிறைபிடிக்கப்பட்ட 12 மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு (நவ.,10) 23 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இன்று 12 பேர் சிறைபிடிப்பால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நேற்று சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேருக்கும் 25ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தீர்ப்பைத் தொடர்ந்து மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் அடைக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக, யாழ்ப்பாணத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசிய அதிபர் அனுர குமார திசநாயக், “இலங்கைக்கு சொந்தமான பகுதிகளில், இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடிப்பது தடுக்கப்படும் என்றும், இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இலங்கை மீனவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்”என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
