மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவு.
நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 1-ஆம் தேதி நடைபெற்றது. பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் அடுத்து யார் ஆட்சி கட்டிலில் அமர போகிறார்கள் என எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
இதுவரை குஜராத்தில் பாஜக, காங்கிரஸ் இடையே போட்டி நிலவி வந்த நிலையில், தற்போது டெல்லி, பஞ்சாபை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியில் களத்தில் உள்ளது. இதனால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. இருப்பினும் குஜராத்தில் மீண்டும் பாஜவுக்குத்தான் அதிக வாய்ப்பு உள்ளது என தேர்தல் கணிப்புகள் கூறுகின்றன.
இந்த சமயத்தில் தான் குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில், 89 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 1-ஆம் தேதி நடைபெற்றிருந்தது. முதற்கட்ட தேர்தலில் 788 வேட்பாளர்கள் களத்தில் இருந்த நிலையில், சுமார் 2.39 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
இந்த நிலையில், குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான (இரண்டாம் கட்டம்) இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. இன்று இரண்டாம் கட்ட தேர்தலில் 14 மாவட்டங்களில் 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
பாஜக, ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட 61 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், 2.51 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். தற்போது குஜராத்தில் இறுதி கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட தேர்தலில் 67% வாக்குகள் பதிவாகியுள்ளன என தகவல் கூறப்படுகிறது.
ஏற்கனவே, 89 தொகுதிகளுக்கு நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 63% வாக்குகள் மட்டுமே பதிவானது. தற்போது, இன்று 93 தொகுதிகளுக்கு நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 4% கூடுதலாக வாக்குகள் பதிவாகியுள்ளன. குஜராத் தேர்தலின் முடிவுகள் 8-ஆம் தேதி அறிவிக்கப்படும். எனவே, குஜராத்தில் மும்முனை போட்டி நிலவும் நிலையில் அடுத்த ஆட்சி யாருடையது என்று எதிர்பார்க்கபடுகிறது.