புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் இயங்கும்… பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!
புதுச்சேரியில் நாளை வழக்கம் போல பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி: புதுவையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக, பள்ளி கல்லூரிகள் கடந்த 5 நாட்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, நாளை வழக்கம் போல பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்றும், நிவாரண முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
பல்கலை.தேர்வுகள் ஒத்திவைப்பு:
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தைத் தொடர்ந்து புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிவாரணம் அறிவிப்பு:
புதுச்சேரியில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இயல்பு வாழ்க்கை முற்றலும் பாதிக்கப்பட்டு அவர்கள் தண்ணீரில் தத்தளித்து வருகிறார்கள். இந்நிலையில், புயல், மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ. 5,000 வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.