பிரான்ஸ் : உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திரமான லமின் யமால் (Lamine Yamal) வெளிப்படுத்தியுள்ள அதீத தன்னம்பிக்கை கால்பந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 19-வது பிறந்தநாளைக் கொண்டாடிய கையோடு, தனது வாழ்நாளின் மிக முக்கியமான போட்டியை எதிர்கொள்ளத் தயாராகியுள்ளார் இந்த பார்சிலோனா வீரர்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய யமால், பிரான்ஸ் அணியை எதிர்கொள்வது குறித்த பயம் தங்களுக்குச் சிறிதும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினார்.
இதுகுறித்து பேசிய அவர் "நாங்கள் ஐரோப்பிய சாம்பியன்கள், அதனால் எந்தவொரு போட்டியையும் கண்டு நாங்கள் அஞ்சப்போவதில்லை. பிரான்ஸ் அணியுடனான மோதலை வெறும் கால்பந்து போட்டியாக மட்டுமே பார்க்கிறோம்," என்று அவர் உறுதியுடன் கூறினார்.
நியூயார்க்கில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று, கோப்பையை வெல்வதே தனது கனவு என்று கூறிய யமால், 2010-ஆம் ஆண்டு ஸ்பெயின் உலகக்கோப்பையை வென்றது போன்ற வரலாற்று வெற்றியை மீண்டும் படைக்க வேண்டும் என்பதே தங்கள் அணியின் ஒட்டுமொத்த நோக்கம் என்று தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் "இவ்வளவு பெரிய போட்டியில் விளையாடும்போது அழுத்தம் இருக்காதா?" என்ற கேள்விக்கு, "நான் எனக்குத் தெரிந்ததை விளையாடுகிறேன். அணிக்காக முழு அர்ப்பணிப்புடன் விளையாடும்போது, எந்த அழுத்தமும் எனக்குத் தெரிவதில்லை," எனவும் பதில் அளித்தார்.
தான் விளையாடும் விதம் குறித்துச் சிலர் விமர்சிப்பது குறித்துப் பேசிய அவர், "நான் சிறப்பாக விளையாடவில்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள், என்னிடம் எதையும் எதிர்பார்க்காதீர்கள் என்று நினைக்கிறீர்கள். ஆனால், நாளை என்ன நடக்கும் என்பதை நீங்களே பாருங்கள், நிச்சயம் சிறப்பாக அமையும்," எனத் தன்னம்பிக்கையுடன் சவால் விடுத்துள்ளார்.
