டெல்லி :செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10-ஆம் தேதி நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக உளவுத்துறை விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த குடியரசு தினத்தன்று (ஜனவரி 26) செங்கோட்டையில் பிரதமர் உரையாற்றும் போது குண்டு வைக்கத் திட்டமிட்டிருந்ததாக கைது செய்யப்பட்ட முஸம்மில் ஷகீல் போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். இதேபோல் தீபாவளி தினத்தன்றும் குண்டுவெடிப்பு நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், கடைசி நேரத்தில் கைவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் இன்னும் தீராத சோகமான அதிர்ச்சி சம்பவமாக இருந்து வரும் சூழலில், முஸம்மில் ஷகீல் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம் மேலும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தத் தகவல்கள் வெடிப்பு திட்டமிடப்பட்ட பயங்கரவாதச் செயலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளன. கைது செய்யப்பட்ட முஸம்மில் ஷகீலின் செல்போனில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகள் மூலம், அவர் மற்றும் உயிரிழந்த உமர் நபி ஆகியோர் கடந்த ஜனவரி முதல் வாரத்தில் செங்கோட்டை பகுதிக்கு பல முறை சென்றது தெரியவந்துள்ளது. செங்கோட்டையில் கடும் பாதுகாப்பு இருந்ததால் அங்கு தாக்குதல் நடத்தும் திட்டம் தோல்வியடைந்திருக்கலாம் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் 3,000 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது இந்த வெடிப்புடன் தொடர்புடையதா என்றும் தீவிர விசாரணை நடக்கிறது.வெடிப்பு நடந்த அன்று காலையில் ஃபரிதாபாத்தில் வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 2,900 கிலோ கெமிக்கல் கைப்பற்றப்பட்டது உமர் நபிக்கு பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று உளவுத்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திட்டங்களை மாற்ற முயன்றபோது கார் வெடிப்பு எதேச்சையாக நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இது தற்கொலைப் படை தாக்குதல் இல்லை, விபத்தாக நடந்த வெடிப்பு என்றும் தெரிகிறது. உமர் நபி IED வெடிகுண்டை அரைகுறையாக அமைத்ததால் பெரிய தாக்கம் ஏற்படவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.இதுவரை சம்பவம் தொடர்பாக முஸம்மில் ஷகீல், அடீல் அஹ்மத் ராதர், ஷஹீன் சயீத் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஷஹீன் பெண் மருத்துவர். காரை ஓட்டிய உமர் நபியும் மருத்துவர். இவர்கள் அனைவரும் அல்-பலாஹ் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த சம்பவத்தில் வெளிநாட்டவர்களின் தலையீடு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.இந்தப் பகீர் தகவல்கள் டெல்லி வெடிப்பு சம்பவம் திட்டமிட்ட பயங்கரவாதச் செயலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளன. என்ஐஏ, என்எஸ்ஜி உள்ளிட்ட அமைப்புகள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளன. குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.
