இந்தியப் பெருங்கடல் பதற்றம்: மௌனம் காக்கும் பிரதமர்?- ராகுல் காந்தி தாக்கு!

நரேந்திர மோடி மத்திய கிழக்கு மற்றும் இந்தியப் பெருங்கடல் பதற்றம் குறித்து மௌனம் காக்கிறார் என இந்திய பிரதமரை கடுமையாக சாடிய எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி

narendra modi rahul gandhi

டெல்லி :அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் பதற்றம் இந்தியப் பெருங்கடலுக்கும் விரிவடைந்துள்ளது. இலங்கை கடற்கரையில் இருந்து சர்வதேச நீர்ப்பரப்பில் ஈரான் போர்க்கப்பல் IRIS Dena இந்தியா நடத்திய Milan கடற்படை பயிற்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது, அமெரிக்கா நீர்மூழ்கிக் கப்பலால் டார்பிடோ தாக்குதல் நடத்தி மூழ்கடிக்கப்பட்டது. இந்த சம்பவம் இந்தியாவின் அருகிலேயே நடைபெற்றுள்ளதால் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு அடுத்த நாள், எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். “போர் நமது வாசலுக்கே வந்துவிட்டது, ஆனால் பிரதமர் மோடி இதுபற்றி வாய் திறக்காமல் மௌனம் காக்கிறார்” என்று ராகுல் கூறியுள்ளார். உலகம் கொந்தளிப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்தியாவுக்கு உறுதியான தலைமை தேவை என்றும், ஆனால் அமெரிக்காவிடம் நாட்டையே விட்டுக்கொடுத்த ஒரு சமரச பிரதமரை நாம் கொண்டுள்ளோம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ராகுல் காந்தி தனது X (முன்பு ட்விட்டர்) பதிவில், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் 40% ஹார்முஸ் நீரிணை வழியாக வருவதால் பெரும் அச்சுறுத்தல் உள்ளதாகவும், LPG மற்றும் LNG விநியோகம் மேலும் மோசமடையும் என்றும் எச்சரித்துள்ளார். “போர் நமது கொல்லைப்புறத்திற்கே வந்துவிட்டது. ஆனால் பிரதமர் ஒன்றும் சொல்லவில்லை” என்று அவர் விமர்சித்துள்ளார்.

இந்த சம்பவம் இந்தியாவின் பொருளாதார பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி இந்த சம்பவத்தை மோடி அரசின் வெளியுறவுக் கொள்கை தோல்வி என்று சாடியுள்ளது. ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவில் ஏற்பட்டுள்ள சமரசங்களை சுட்டிக்காட்டுகிறது.

இதனால் அரசியல் வட்டாரங்களில் பிரதமரின் மௌனம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.ஒட்டுமொத்தமாக, அமெரிக்காவின் இந்த தாக்குதல் இந்தியாவின் அருகிலேயே நடைபெற்றுள்ளதால் நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைமை குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன. ராகுல் காந்தியின் கண்டனம் அரசின் வெளியுறவுக் கொள்கையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. போர் பதற்றம் தொடர்ந்தால் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி மற்றும் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.