டெல்லி :புதிய ஜிஎஸ்டி வரிவிதிப்பில் உடல்நலம், மருத்துவம் சார்ந்த துறைக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் உயிர் காக்கும் மருந்துகள், தனிநபர் மற்றும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியங்களுக்கு ஜிஎஸ்டி (GST) வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
பீட்சா பிரட், பனீர் ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். உயிர்காக்கும் மருந்து பொருள்களுக்கான வரி 12%-ல் இருந்து பூஜ்ஜியமாக குறைக்கப்படுவதாகவும், அனைத்து மோட்டார் வாகன உதிரிபாகங்களுக்கும் 18% வரிவிதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், டிராக்டர், வேளாண் பொருள்களுக்கு 5% வரிவிதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
அதன்படி, ஹெல்த் மற்றும் லைஃப் இன்ஷூரன்ஸ்-க்கு 18% ஆக இருந்த வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. தெர்மோமீட்டர், மருத்துவ பயன்பாட்டு ஆக்சிஜன், அனைத்து நோயறியும் கருவிகள் மற்றும் ரீ-ஏஜண்ட்கள், குளூக்கோமீட்டர் மற்றும் டெஸ்ட் ஸ்ட்ரிப்ஸ், பார்வை குறைபாட்டை சரிசெய்யும் கண்ணாடி ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு, மருத்துவச் செலவுகளை குறைப்பதற்கும், பொதுமக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கும் எடுக்கப்பட்டுள்ளது. இது பல குடும்பங்களுக்கு பொருளாதார நிவாரணத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த முடிவு ஜிஎஸ்டி கவுன்சிலின் குழு (GoM) பரிந்துரையின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகவும், இதன் மூலம் மக்களுக்கு மருத்துவ சேவைகளை மலிவாக்குவதற்கு அரசு முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
