புதுடெல்லி :மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, 2024 மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக ஆகஸ்ட் 7, 2025 அன்று புதுடெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர் “தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகள் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு சாதகமாக இருந்தபோதிலும், முடிவுகள் பாஜக-வுக்கு சாதகமாக அமைந்தன. இது தேர்தல் ஆணையத்தின் மோசடியை வெளிப்படுத்துகிறது,” என்று அவர் குற்றம்சாட்டினார்.
வாக்காளர் பட்டியலை பகிர மறுப்பது, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு, மற்றும் போலி வாக்காளர்களை சேர்த்தது ஆகியவை தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவதாக அவர் விமர்சித்தார். இது குறித்து அவர் பேசுகையில் “2024 லோக்சபா தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் இடையேயான 5 மாதங்களில், 2019 முதல் 2024 வரை 5 ஆண்டுகளில் சேர்க்கப்பட்ட 32 லட்சம் வாக்காளர்களை விட அதிகமாக, 39 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். மகாராஷ்டிராவில் மக்கள் தொகையை விட வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் ஆய்வில், மகாதேவபுரா தொகுதியில் மட்டும் 11,965 புனைவாக்காளர்கள் (Duplicate Voters), 40,009 போலி மற்றும் செல்லாத முகவரிகள் (Fake & Invalid Addresses), 10,452 ஒரே முகவரியில் கூட்டமாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் (Bulk Voters in Single Address), 4,132 செல்லாத புகைப்படங்கள் (Invalid Photos), மற்றும் 33,692 முறைகேடாக பயன்படுத்தப்பட்ட படிவம் 6 (Misuse of Form 6) ஆகியவை கண்டறியப்பட்டதாக அவர் ஆதாரங்களுடன் வெளியிட்டார்.
மேலும், தொடர்ந்து பேசிய அவர் ” மகாராஷ்டிர தேர்தல் ஒரு மோசடியின் அடிப்படையில் நடந்தது. தேர்தல் ஆணையம் பாஜக-வுடன் கூட்டு சேர்ந்து, வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களை சேர்த்து, வாக்கு எண்ணிக்கையை உயர்த்தி, பாஜக-வுக்கு சாதகமான தொகுதிகளில் முறைகேடு செய்து, ஆதாரங்களை மறைத்துள்ளது,” என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
அதே சமயம், இந்த மோசடி ஐந்து கட்டங்களில் நடந்ததாக அவர் விவரித்தார்: 1) தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்தில் முறைகேடு, 2) வாக்காளர் பட்டியலில் மோசடி, 3) வாக்கு எண்ணிக்கை உயர்த்தல், 4) பாஜக-வுக்கு சாதகமான இடங்களில் போலி வாக்குகள், 5) ஆதாரங்களை மறைத்தல். இந்த குற்றச்சாட்டுகள், 2023 சட்டீஸ்கர் மற்றும் 2024 மகாராஷ்டிர தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்ததற்கு பின்னணியில் உள்ள முறைகேடுகளை அம்பலப்படுத்துவதாக அவர் கூறினார்.
குறிப்பாக மகாதேவபுரா தொகுதியில், “முகவரி இல்லாதவை, ‘O’, ‘-’, ‘#’ போன்ற செல்லாத முகவரிகள், அல்லது சரிபார்க்க முடியாத முகவரிகள்” 40,009 உள்ளதாக கண்டறிந்தது. மேலும், ஒரே முகவரியில் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது, செல்லாத புகைப்படங்களுடன் வாக்காளர் அடையாளங்கள், மற்றும் படிவம் 6-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களை பதிவு செய்தது ஆகியவை மோசடியின் அளவை காட்டுவதாக ராகுல் காந்தி தெரிவித்தார். கதவு எண்0, தெரு பெயர் 0, ஆனால், கணவர் பெயருடன் வாக்காளர் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரே நபர் கர்நாடகாவிலும், உ.பி. மகாராஷ்டிராவிலும் வாக்களித்துள்ளார்” எனவும் ஆதாரங்களுடன் பேசி இந்தியத்தேர்தல் ஆணையம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி வைத்துள்ளார்.
