டெல்லி :புது டெல்லியில் 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்று முடிந்து இன்றும் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் தற்போதைய நான்கு அடுக்கு ஜிஎஸ்டி வரி அமைப்பு (5%, 12%, 18%, 28%) இரண்டு அடுக்கு அமைப்பாக (5% மற்றும் 18%) குறைக்க முடிவு செய்துள்ளது.
அதாவது, தற்பொழுது நடைமுறையில் உள்ள ஜிஎஸ்டி வரியில் 12% மற்றும் 28% வரம்புகளை நீக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இனி 5%, 18% வரம்புகள் மட்டுமே தொடரும் என்றும், சிறப்பு வரி விதிப்பாக 40% வரம்பு அறிமுகப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.
இந்த மாற்றம் செப்டம்பர் 22 முதல் (நவராத்திரியின் முதல் நாள்) அமலுக்கு வரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும், அந்த சிறப்பு வரி என்னவென்றால், சில ஆடம்பர பொருட்களுக்கு (luxury and sin goods) 40% என்ற புதிய வரி விகிதம் அறிமுகப்படுத்தப்படும். மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு இணைந்து இந்த சீர்திருத்தங்களை விரைவாக செயல்படுத்த உள்ளன.
இதனால் அத்தியாவசியப் பொருட்களான கீர், நட்ஸ், 20 லிட்டர் தண்ணீர், நம்கீன், காலணிகள், ஆடைகள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றின் வரி 12%லிருந்து 5% ஆகக் குறைய வாய்ப்புள்ளது. இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தால், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் குறைவதால் பொதுமக்களுக்கு பெரும் நிவாரணமாக இருக்கும். மேலும், இது பொருளாதாரத்தை மேம்படுத்தி, எளிமையான வரி அமைப்பை உருவாக்கும்
