சென்னை :தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில், ”தேர்தல் ஆணையத்தின் மோசடிகளை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி. ஆனால் அதற்கு நேரடியாக பதில் கூற முன்வராத தேர்தல் ஆணையம் ராகுல் காந்தி அவர்கள் பிரமாணம் எடுத்து குற்றச்சாட்டை கூறினால் நடவடிக்கை எடுக்க தயார் என கூறியிருக்கிறது.
பீகார் சட்டமன்ற தேர்தலையொட்டி 65 லட்சம் வாக்காளர்கள் கொண்ட பட்டியலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை உச்சநீதிமன்றத்தில் வந்தபோது தேர்தல் ஆணையம் வழங்க மறுத்துவிட்டது சுதந்திரமான தேர்தலுக்கு விடப்பட்ட சவாலாகும்.
ஊடகங்கள் வாயிலாக திரை வெளியீட்டின் மூலம் புள்ளி விபரங்களோடு குற்றச்சாட்டுக்களை கூறிய பிறகு தேர்தல் ஆணையம் திசை திருப்புகிற வகையில் பதில் கூறுவது பொறுப்பற்ற செயலாகும். இந்த மறுப்புக்கு பின்னணியில் மிகப்பெரிய சதித்திட்டம் இருப்பதாக நம்புவதற்கு இடமிருக்கிறது. டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வழங்கினால் 30 வினாடிகளில் போலி வாக்காளர்களை கண்டுபிடித்து விடலாம் என்று ராகுல் காந்தி கூறியதற்கு பிறகு அதை வழங்க மறுப்பது பாஜகவின் தேர்தல் வெற்றிக்கு தேர்தல் ஆணையம் துணைபோகிறது என்ற குற்றச்சாட்டு உறுதியாகிறது.
முதல் கேள்வியாக டிஜிட்டல் வடிவத்தில் உள்ள வாக்காளர் பட்டியலை இந்திய மக்கள் படிக்கிற வகையில் ஏன் வெளியிட முன்வரவில்லை?. இரண்டாவதாக, தேர்தல் ஆணையம் தன்னிடம் உள்ள ஆதாரங்களை ஏன் அழிக்கிறது?. மூன்றாவதாக, தேர்தல் ஆணையம் பெருமளவில் வாக்காளர் பட்டியலில் மோசடி செய்வது ஏன்?.
நான்காவதாக, எதிர்க்கட்சிகள் கூறுகிற குற்றச்சாட்டுக்கு பதில் கூறாமல் மிரட்டுவது ஏன்?. ஐந்தாவது கேள்வியாக, பாஜகவின் ஏஜென்ட் ஆக தேர்தல் ஆணையம் செயல்படுவது ஏன்? என்று பகிரங்கமாக ராகுல் காந்தி கேள்விக்கணைகளை தொடுத்திருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown node