துபாய்:ஆசிய கோப்பை 2025-ன் சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் இந்தியா, இலங்கையை சூப்பர் ஓவரில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு இறுதிப் போட்டி உறுதியாகி இருந்ததால் இந்தப் போட்டி முக்கியமற்றதாகக் கருதப்பட்டாலும், இரு அணிகளும் 20 ஓவர்களில் 202 ரன்கள் எடுத்து ஆட்டம் டையாக முடிந்தது. சூப்பர் ஓவரில் இலங்கை 5 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுக்க, இந்தியா ஒரே பந்தில் 3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. போட்டி சூப்பர் ஓவர் சென்ற பிறகு யார் சூப்பர் ஓவர் வீச போகிறார் என்கிற எதிர்பார்ப்புகள் எழுந்திருந்த நிலையில், அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதனையடுத்து, இந்திய அணியின் T20I கேப்டன் சூர்யகுமார் யாதவ், சூப்பர் ஓவருக்கு இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை தேர்ந்தெடுத்தது ஏன் என்பதை விளக்கினார்.போட்டிக்குப் பிறகு பேசிய சூர்யகுமார், “அர்ஷ்தீப் பல முக்கியமான சூழல்களில் சிறப்பாக பந்து வீசியிருக்கிறார். அவரிடம், ‘உன் திட்டத்தை நம்பி, வேறு எதையும் யோசிக்காமல் செயல்படு’ என்று சொன்னேன். இறுதிப் போட்டிக்கு முன்பே தகுதி பெற்றிருந்தாலும், அவரது திறமையை நான் நம்பினேன்.
இந்தியாவுக்காகவும், ஐபிஎல் அணியான பஞ்சாப் கிங்ஸ்க்காகவும் அவர் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். அவரது நம்பிக்கை தெளிவாகத் தெரிகிறது. சூப்பர் ஓவருக்கு அர்ஷ்தீப் மட்டுமே சரியான தேர்வு,” என்று விருது வழங்கும் நிகழ்ச்சியில் கூறினார். போட்டியில் அர்ஷ்தீப், சூப்பர் ஓவரில் குசல் பெரேரா மற்றும் தாசுன் சனகாவை வீழ்த்தி, 2 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து வெற்றியை உறுதி செய்தார்.இந்தப் போட்டி இறுதிப் போட்டி போல் உணர்ந்ததாக சிரித்தபடி கூறிய சூர்யகுமார், “முதல் பகுதியில் 93/3 என்ற நிலையில் இருந்தோம்.
ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் வீரர்கள் சிறப்பாக ஆடினர். இதை அரையிறுதி போல் ஆடச் சொன்னேன். அனைவரையும் ஒருங்கிணைத்து, நல்ல ஆற்றலுடன் ஆடினோம். வீரர்கள் தங்கள் திட்டங்களை தெளிவாகச் செயல்படுத்தி, பயமின்றி ஆடியது முக்கியம். இறுதிப் போட்டிக்கு மகிழ்ச்சியுடன் செல்கிறோம்,” என்றார். மேலும், இந்த போட்டியில் வெற்றிபெற்றதை தொடர்ந்து அடுத்ததாக செப்டம்பர் 28-ல் துபாயில் நடக்கவிருக்கும் இறுதிப் போட்டியில், இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்ளவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
