2027 உலகக் கோப்பையில் புவனேஸ்வர் குமார் கண்டிப்பாக இருக்கனும் - அஸ்வின் வலியுறுத்தல்!

தென் ஆப்பிரிக்க மைதானங்களில் புவனேஸ்வர் குமார் ஸ்விங் பந்துவீச்சு இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

Hero Image

டெல்லி : தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள 2027 ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கான 12 மைதானங்களை ஐசிசி (ICC) அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் இந்த உலகக் கோப்பை அணியில் கண்டிப்பாக இந்திய அணிக்காக விளையாட இடம்பெற வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஆர். அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி (RCB) அணியின் இரண்டாவது கோப்பை வெல்லும் வெற்றியில் புவனேஸ்வர் குமாரின் பந்துவீச்சு மிக முக்கியப் பங்கு வகித்ததுடன், அந்தத் தொடரில் அவர் 28 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியிருந்தார். தென் ஆப்பிரிக்க மண்ணின் தன்மை பந்து நன்றாக ஸ்விங் ஆவதற்கு உதவும் என்பதால், அங்கு நடைபெறும் உலகக் கோப்பையில் புவனேஸ்வர் குமார் இந்திய அணிக்குப் பெரும் பலமாகத் திகழ்வார் என்று அஸ்வின் கணித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவ்வின் "புவனேஸ்வர் குமார் உலகக் கோப்பையில் விளையாட வேண்டும். அவரிடம் நான் நேரில் பேசுவேன். முதல்தரப் போட்டிகள் மற்றும் விஜய் ஹசாரே போன்ற உள்நாட்டுத் தொடர்களில் அவரால் எங்கு விளையாட முடியுமோ அங்கு விளையாடும்படி அவரிடம் கூறுவேன். அடுத்த உலகக் கோப்பையில் இந்தியாவின் தேவைக்கு அவர் அவசியமானவர். தென் ஆப்பிரிக்க மண்ணில் அவரது பந்துவீச்சுத் திறன் இந்திய அணிக்குச் சாதகமாக அமையும்" என்று ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, சஞ்சு சாம்சன், வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, ரிஷப் பந்த், ரவி பிஷ்னோய் மற்றும் ஷிவம் துபே போன்ற வீரர்களை இந்த உலகக் கோப்பை அணியின் பரிசீலனைக்குக் கொண்டுவரத் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல். ராகுல், சுப்மன் கில், அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் அணியின் முக்கிய வீரர்களாக இருக்க வேண்டும் என்றும், பும்ராவுடன் இணைந்து புவனேஸ்வர் குமார் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் சிறப்பு வேகப்பந்து வீச்சாளர்களாகப் இடம்பெறலாம் என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

36 வயதான புவனேஸ்வர் குமார் கடைசியாக கடந்த 2022 நவம்பரில்தான் இந்திய அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை அவர் தென் ஆப்பிரிக்க மண்ணில் 13 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.